கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ரெயில்கள் வருகிற 31-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படாது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்குரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பயணிகள் ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள், தங்களது டிக்கெட் பணத்தை திரும்ப பெறுவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது. அந்தவகையில் ரத்து செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டை கவுண்ட்டர்களில் கொடுத்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.இந்தநிலையில் ரெயில் டிக்கெட் பணத்தை திரும்ப பெறுவதற்காக பயணிகள் ரெயில் நிலையங்களில் கூடுவதை தவிர்க்க, முன்பதிவு மையங்கள், முன்பதிவில்லா டிக்கெட் கவுண்ட்டர்கள், அனைத்தும் வருகிற 31-ந்தேதி வரை மூடப்படுகிறது. இதனால் பயணிகள் ரத்து செய்யப்பட்ட டிக்கெட் பணத்தை திரும்ப பெறுவதற்காக ரெயில் நிலையங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் டிக்கெட் கவுண்ட்டர்களில் 31-ந்தேதி வரை டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படாது. பயணிகள் டிக்கெட்டை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட் பெறும் வசதியும் 31-ந்தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் இதனை கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.