கரோனாவை தடுக்க தமிழகத்திலும் வரும் 31-ஆம் தேதி வரையாவது ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், கரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக இம்மாதம் 31-ஆம் தேதி வரை அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும், சென்னையில் மெட்ரோ ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
கரோனா தடுப்புக்கான தொடர்வண்டித் துறையின் சிறப்பான பங்களிப்பு இது. பாராட்டத்தக்கது!
தமிழ்நாட்டில் முழு அடைப்பு மற்றும் மக்கள் ஊரடங்கு நாளை அதிகாலை 05.00 மணி வரை நீட்டிக்கப்பட்டிருப்பது நல்ல நோக்கத்தினாலான நடவடிக்கை. ஆனால், போதுமானதல்ல. முதல்கட்டமாக குறைந்தபட்சம் மார்ச் 31-ஆம் தேதி வரையாவது ஊரடங்கை தமிழக அரசு நீட்டிக்க வேண்டும்!
கரோனா வைரஸ் தாக்குதலை தடுப்பதற்காக உலகம் முழுவதும் 100 கோடிக்கும் கூடுதலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
தமிழகத்திலும் கரோனாவை தடுக்க வரும் 31-ஆம் தேதி வரையாவது ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும். இதுபற்றிய அரசு அறிவிப்பு வரும் என்று நம்புகிறேன்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.