உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,500-ஐ தாண்டிவிட்டது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் நேற்றுமுன்தினம் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை பார்த்திராத இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் மிகவும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கவும், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் முடிவு செய்துள்ளன.டெல்லி, பஞ்சாப், ஜார்கண்ட், நாகலாந்து, கேரளா உள்பட 30 மாநிலங்களில் உள்ள 548 மாவட்டங்களில் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. மராட்டியம், ராஜஸ்தான், உத்தரகாண்ட் உள்பட பல மாநிலங்கள் ஏற்கனவே மாநிலத்தின் ஒரு பகுதிக்கு தடை விதித்துள்ளது. பீகார், அரியானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பல மாவட்டங்களுக்கு இதுபோன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பகுதியளவு தடை விதிக்கப்பட்டுள்ளது. மிசோரம், சிக்கிம் ஆகிய இரு மாநிலங்கள் மட்டுமே இன்னும் தடையுத்தரவை அமல்படுத்தவில்லை