புதுவை கரிக்கலாம் பாக்கத்தை சேர்ந்த நிருபன் ஞானபானு என்ற இளைஞர் நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்று படகுத்துறை அருகே ஜல்லிக்கட்டு என்ற ஓட்டலை தொடங்கி உள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட இந்த ஓட்டலில் வித்தியாசமான சலுகைகளை அவர் அறிவித்துள்ளார். அதில், சாப்பிட வருபவர்கள் 100 திருக்குறளை ஒப்புவித்தால் அவர்களுக்கு பிரியாணி மற்றும் காடை வறுவல், இறால் தொக்கு, நண்டு வறுவல், வஞ்சிரம் மீன் உள்ளிட்ட 20 வகை அசைவ விருந்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் மாமியார் - மருமகள் ஒன்றாக வந்து சாப்பிட்டால் அவர்களுக்கு 50 சதவீத கட்டணம் இலவசம்.
அவர்கள் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டால் முற்றிலும் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பார்த்து பலர் திருக்குறள் ஒப்புவிக்க வருகிறார்கள். இதுவரை 4 பேர் மட்டுமே 100 திருக்குறளை ஒப்புவித்து விருந்து சாப்பிட்டு சென்றுள்ளனர்.