தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:
வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூா், மதுரை, விருதுநகா், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற இடங்களில் வட வானிலை நிலவும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும்.
பகலில் 93 பாரன்ஹீட் டிகிரி வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி, திருச்சிராப்பள்ளியில் 101 டிகிரியும், மதுரை விமானநிலையம், சேலத்தில் தலா 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது என்றாா் அவா்.