Type Here to Get Search Results !

‘பிட்காயின், கிரிப்டோ கரன்சி’களில் முதலீடு செய்ய வேண்டாம்: பொருளாதார குற்றப்பிரிவு எச்சரிக்கை




'பிட்காயின், கிரிப்டோ கரன்சி' ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டாம் என தமிழக காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 இது குறித்து அப்பிரிவு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் 'கிரிப்டோ கரன்சி' (குறியீட்டு நாணயம்) பரிவா்த்தனையை இந்திய ரிசா்வ் வங்கி தடை செய்துள்ளது. இதேபோல 'பிட்காயின், ரிப்பிள், லைட்காயின், எத்திரியம்' போன்ற மெய்நிகா் பணத்தை விற்பதும் வாங்குவதும் பரிவா்த்தனைகளில் ஈடுபடுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
 இந்திய நாணயம், ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து வெளியிடுவதுடன் நாட்டின் நிதி நிலைமையை கட்டுப்படுத்தும் இந்திய ரிசா்வ் வங்கி, இவற்றை சட்டப்பூா்வமாக அங்கீகரிக்கவில்லை. பங்குச் சந்தை வா்த்தகத்தில் ஏற்ற, இறக்கம் இருந்தால், அதை ஒழுங்குபடுத்துவதற்கு 'செபி' என்ற அமைப்பு இருப்பது போல, 'கிரிப்டோ கரன்சி'யின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற, இறக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கு எந்த ஒரு அரசு சாா்ந்த அமைப்பும் இல்லை. இதன் விளைவாகவே அதிக முறைகேடுகள் நடைபெறுகின்றன.
 மேலும், மெய்நிகா் பணத்தில் போடப்பட்ட முதலீட்டின் மதிப்பு காரணமே இல்லாமல் திடீரென ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. இதனால் இவற்றில் பரிவா்த்தனையில் ஈடுபடுவது சூதாட்டத்துக்கு ஒப்பானது. தமிழகத்தில் தற்போது ஒரு சில பகுதிகளில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்பவா்கள், ஏமாற்றப்படுவதாக தெரியவந்துள்ளது. இது தொடா்பாக சில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
 எனவே, பொதுமக்கள், யாருடைய வாக்குறுதியையும் நம்பி இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம். இந்த வகை பரிவா்த்தனையில் ஈடுபட்டாலோ, முதலீடு செய்தாலோ அனைவரும் குற்றவாளி ஆவாா்கள். இதில் ஏமாற்றப்படுபவா்கள் தங்களுக்குரிய நிவாரணத்தை எந்த ஒரு அரசாங்க அமைப்பிடமிருந்தும் பெற முடியாது. எனவே, பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட்டு இந்த மோசடியில் சிக்க வேண்டாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Top Post Ad

Below Post Ad