Type Here to Get Search Results !

எனி ஹெல்ப்.. ஆற்றில் சிக்கிய மனிதருக்குக் கைகொடுத்த உராங்குட்டான்



ஆற்றில் சிக்கிய வனத்துறை ஊழியருக்கு கைகொடுத்து உதவிய உராங்குட்டானின் புகைப்படம் செய்தித் தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

மனிதனைப் போல அழகாக கையை நீட்டி, ஆற்றில் சிக்கிய ஊழியருக்கு உதவ முன் வந்த உராங்குட்டானின் புகைப்படம் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

போர்னியோ வனப்பகுதியில் பாம்புகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வன ஊழியர், சகதி நிறைந்த ஆற்றில் சிக்கிக் கொண்டார். அவரைப் பார்த்த உராங்குட்டான் வகை குரங்கு ஒன்று கரைப் பகுதியில் ஒரு கையை ஊன்றியபடி, மற்றொரு கையை அவரை நோக்கி நீட்டியது.

இதனை அவ்வழியாக நண்பர்களுடன் வந்த அனில் பிரபாகர் என்ற பயணி படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

புகைப்படத்துடன், பதியப்பட்டுள்ள பதிவில், ஆற்றில் சில பாம்புகள் இருப்பதாக வன ஊழியர் ஒருவர் கூறினார். மற்றொருவர் உடனடியாக ஆற்றில் இறங்கி கழிவுகளை அகற்றினார். இதனை அங்கிருந்த உராங்குட்டான் பார்த்துக் கொண்டிருந்தது. அவர் கரையை அடைந்ததும் எழுந்துச் சென்று உதவ முன்வருவது போல கையை நீட்டியது. ஆனால், அந்த மனிதர், குரங்கிடம் இருந்து சற்று நகர்ந்து வந்துவிட்டார். அப்போது அவரிடம், 'ஏன் அதன் உதவியை ஏற்றுக் கொள்ளவில்லை?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'அது காட்டு விலங்கு. எனக்கு அதிகம் பரிட்சயமில்லாத ஒன்று கூட' என்று பதிலளித்ததாகத் தெரிவித்துள்ளார்.

மனிதர்களிடம் மனிதம் மடிந்து கொண்டிருக்கும் நிலையில், அதனை நமக்கு இந்த விலங்குகள் நினைவூட்டுகின்றனவோ என்றே புகைப்படத்தைப் பார்க்கும் போது தோன்றுகிறது.

தற்போதெல்லாம் யாராவது ஆபத்தில் சிக்கிக் கொண்டால், அவர்களுக்கு உதவ முன்வருபவர்களை விட, அதனை கேமராவில் புகைப்படம் எடுக்க ஓடும் கைகளே அதிகமாகியுள்ளது வருந்தத்தக்கது.


Top Post Ad

Below Post Ad