சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓய்வின்றி சிகிச்சையளித்து வந்த இளம் மருத்துவர் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரசால் இதுவரை, 563 பேர் உயிரிழந்துள்ளனர்; 28 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர் என, உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.வுஹான் நகரில் உள்ள மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அங்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர்.கடந்த 10 நாட்களாக, ஓய்வுறக்கமின்றி நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த, சாங் யிங்கீ என்ற, 28 வயதான இளம் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.நோயாளிகளைக் காக்க ஓய்வோ உறக்கமோ இன்றி பணியாற்றியதே அவரது இறப்புக்குக் காரணம் என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர் தான் மக்களின் உண்மையான ஹீரோ எனப் புகழ்ந்து பாராட்டி, சீன மக்கள் அனைவரும், அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.