அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - மெலனியா தம்பதியினர் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கின்றனர். டெல்லி, குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்கிறார். அகமதாபாத்தில் 22 கிலோ மீட்டர் தூரம் சாலை மார்க்கமாக அவர் பயணம் செய்கிறார். இந்தநிலையில், மெலனியா டிரம்ப் பயணத்தின் இரண்டாவது நாளில் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்குச் சென்று வகுப்பறைகளைப் பார்வையிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்போது, சில மணி நேரங்கள் பள்ளி குழந்தைகளுடன் உரையாடி பொழுதைக் கழிக்கவும் மெலனியா டிரம்ப் விரும்புவதாகக் கூறப்படுகிறது.டெல்லி வரும் மெலனியா டிரம்பை, முதல்-மந்திரி அரவிந்த் கெஜரிவால் மற்றும் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா ஆகியோர் வரவேற்க உள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடியுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சந்திப்பு நிகழும் போது, மெலனியா டிரம்ப் தனியாக டெல்லி பள்ளிக்கு வருகை தருவார் என்று கூறப்படுகிறது.