மீறினால் ஓராண்டு சிறை, அபராதம்...
2021ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி முதல் நகைகளை ஹால்மார்க் முத்திரையுடன் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக இந்திய தர நிர்ணய அமைவனத்தில் வர்த்தகர்கள் பதிவு செய்து கொள்ள ஓராண்டு அவகாசம் அளிக்கப்படுகிறது.
ஹால்மார்க் கட்டாய நடைமுறை தொடர்பான அறிவிப்பு அடுத்த ஆண்டு நுகர்வோர் விவகார அமைச்சகத்தால் வெளியிடப்படும். அதன்பிறகு ஹால்மார்க் முத்திரையுடன் 14, 18 மற்றும் 22 காரட் நகைகளை மட்டுமே விற்க முடியும். மீறினால், ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.இதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதிக்கு பிறகு நகை வாங்குபவர்கள் பிஐஎஸ் ஹால்மார்க் தர முத்திரை, காரட் அளவு, மதிப்பீடு மையத்தின் பெயர் மற்றும் ஜூவல்லரி முத்திரை இருக்கிறதா பார்த்து வாங்க வேண்டும்.
தற்போது நாடு முழுவதும் 234 மாவட்டங்களில் 892 ஹால்மார்க் மதிப்பீடு மற்றும் முத்திரை வழங்கும் மையங்கள் உள்ளன. சுமார் 28,849 நகைக்கடைகள் இதில் பதிவு செய்துள்ளன. விதிகளை மீறினால் ஒரு லட்சம் ரூபாய் முதல் நகை மதிப்பில் 5 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும், ஓராண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என பிஐஎஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஹால்மார்க் என்றால் என்ன ?தங்கத்தின் தரத்தை உறுதி செய்யப் பயன்படும் ஹால்மார்க் முத்திரை என்பது 5 முத்திரைகளை கொண்டது. ஹால்மார்க் முத்திரையில் பிஐஎஸ் முத்திரை, தங்கத்தின் சுத்தத்தன்மை எண், தங்கத்தை சோதனை செய்து முத்திரை அளித்த மையத்தின் முத்திரை, நகை செய்யப்பட்ட ஆண்டு, நகை விற்பனை செய்யும் கடை முத்திரை ஆகிய 5 குறியீடுகள் இடம் பெற்றிருக்கும்.