வாட்ஸ் ஆப் விளம்பரம் கொண்டு வரும் முயற்சியை கைவிட்டுள்ளது பேஸ்புக் நிறுவனம். வாட்ஸ் ஆப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியதிலிருந்து பல புது புது அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நாம் பார்க்கும் வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ்களுக்கு இடையே இனி விளம்பரங்கள் தோன்றும் என கடந்த ஆண்டு நெதர்லாந்தில் நடந்து முடிந்த சந்தைப் படுத்துதல் உச்சி மாநாட்டில் ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்தது. இதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஏதும் பகிரப்படாது எனவும் கூறப்பட்டுள்ளதாம். இந்த அப்டேட் இந்த ஆண்டுக்குள் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது இந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், இந்த முயற்சியை சாத்தியப்படுத்த அமைக்கப்பட்டிருந்த குழுவும் கலைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாட்ஸ் ஆப் விளம்பர முயற்சிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்புகளாலும், வாட்ஸ் ஆப்பை உருவாக்கிய ஜன் கோம் மற்றும் பிரைன் ஆகியோரின் பதவி விலகல் முடிவாலும் இந்த நடவடிக்கை கைவிடப்படுகிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.