நிறைவடையப் போகிறது நடப்பு நிதியாண்டு. சம்பளதாரர்களைப் பொறுத்தவரை, இந்தத் தேதி வரை கிடைக்கப்பெற்ற வருமானத்தையும் பிடிக்கப்பட்ட வருவான வரியையும் ஒப்பிட்டுப் பார்த்து, மிச்சமுள்ள வரியைச் சரிக்கட்ட `தேசிய சேமிப்புப் பத்திரம் வாங்கலாமா, கிஷான் விகாஸ் பத்திரத்தில் முதலீடு செய்யலாமா என்று சிந்திக்கிற தருணம் இது!
ஆனால், அந்தச் சிந்தனை, இந்த வருடம் சற்றே ஒத்திப்போட வேண்டியது அவசியமாகிறது. காரணம், நாட்டின் முப்பெரும் நிதிசார் அமைப்புகள் மத்திய அரசுக்குச் செய்துள்ள மூன்று முக்கியமான பரிந்துரைகள்.
அவை,
1. வரி வரம்புக்கான வருமானத்தை அதிகரித்து, வரிச் சலுகைகளில் சிலவற்றைக் குறைக்க வேண்டும்; சிலவற்றை ரத்து செய்ய வேண்டும் என்பதே அந்தப் பரிந்துரை. வருமான வரித்துறையின் சிறப்புப் பரிசீலனைக் குழு (Special Task Force) செய்துள்ள பரிந்துரை இது.
2. சிறுசேமிப்புக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் பரிந்துரை.
3. என்.பி.எஸ்-ஸுக்குப் பிரிவு 80 CCD (IB)-ன்கீழ் வழங்கப்பட்டு வரும் ரூ.50,000-த்துக்கான வரிச்சலுகையை ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது பென்ஷன் ஃபண்ட் ஒழுங்கு மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் பரிந்துரை.
உள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்!
Submit மேற்கண்ட மூன்று பரிந்துரைகளில் முக்கியமானது, வருமான வரித்துறையின் வரி சீரமைப்புக் குழுவின் பரிந்துரைதான். இந்தப் பரிந்துரைப்படி, தற்போதைய தொடக்க நிலை வருமானம் வரிக்கு உட்படாது என்பதில் மாற்றம் ஏதுமிருக்காது என்று நம்புவோம். அதாவது, 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முதல்கட்ட வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும், 60 வயது நிறைந்த மூத்த குடியினருக்கு ரூ.3 லட்சத்துக்கும், 80 வயதை எட்டிய முதுமூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சத்துக்கும் வருமான வரி கிடையாது.
நிகர வருமானம் ரூ.5 லட்சத்துக்கு உட்பட்டிருந்தால், ரூ.12,500 ரூபாய் வரை வரித்தள்ளுபடி என்பதிலும் மாற்றம் இருக்காது என்று நம்பலாம்.
ஆனால், ரூ.5 லட்சத்துக்குமேல் வருமானம் உள்ள சுமார் மூன்று கோடி வரிதாரர்களுக்கு தற்போதைய வருமான வரியை 10% குறைத்து பரிந்துரை செய்துள்ளது சீரமைக்குழு. (காண்க கீழே தரப்பட்டிருக்கும் அட்டவணை). இதற்குப் பரிகாரமாக அதாவது, வரி விகிதம் குறைவதால் ஏற்படும் வருவாய் இழப்பைச் சரிகட்டி கூடுதலாக ரூ.55,000 கோடி வருவாய் ஈட்ட வரிச்சலுகைகளைக் குறைக்கவும், நீக்கவும் சொல்கிறது பரிந்துரை. வரி விகிதத்தினால் (Tax Slab) பயன் பெறுபவர்களைவிட, சுமார் 23 லட்சம் வரையான வரிச் சலுகையைப் பயன்படுத்தி, வரியைக் குறைத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.
வட்டிக் குறைப்பு
வரிச்சலுகை சீரமைப்பு ஒருபுறமிருக்க, சிறுசேமிப்புக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் பரிந்துரை. ஏனெனில், ரிசர்வ் வங்கியானது சமீப காலத்தில் கொள்கை வட்டி விகிதம் எனப்படும் ரெப்போ ரேட்டை 135 புள்ளிகள் வரை குறைத்துள்ள நிலையில், சிறுசேமிப்புத் திட்டங்களுக்குத் தரப்பட்டு வரும் வட்டி விகிதம் வெறும் 10% மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, வங்கிக்கு வரும் டெபாசிட்டுகள் குறைய ஏதுவாகிறது. பணப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்ய அதிக அளவில் கடன் வழங்க முடியாமல் போகிறது என்பதே வட்டி குறைப்புப் பரிந்துரைக்கான காரணம்.
மேற்கண்ட இரண்டு பரிந்துரைகளுமே தற்போதைய பொருளாதார மந்தநிலையை மீட்டெடுக்கும் முயற்சிகளே. இந்த முயற்சிக்குத் துணை நிற்பது, வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் உள்ள நமது கடமையும்கூட.
என்றாலும், அரசு ஒட்டுமொத்தமாக சலுகைளைக் குறைத்துவிடாது. ஏதோ ஓர் இனம் பரிந்துரைக்கு உட்படும்; மற்றோர் இனம் பலனளிக்க வகை செய்யும். எனவே, அரசு வழங்கப்போகும் எந்தச் சலுகை தனக்கு அதிக பயன் தரக்கூடியது என்பதைத் தெரிந்து அதற்கேற்ப முதலீடுகளை மேற்கொள்ள பட்ஜெட் அறிவுப்பு வரை பொறுமை தேவை.
உடனடி நிவாரணம்
பட்ஜெட் அறிவிப்பு வரை காத்திராமல், உடனடியாக பலன் தரக்கூடிய வரிச்சலுகை இனங்களும் காத்திருக்கவே செய்கின்றன.
அவற்றுள் முக்கியமானது, அரசு ஊழியர்களின் `என்.பி.எஸ் - 2’ கணக்குக்கும் பிரிவு 80C–ன்கீழ் ரூ.1.5 லட்சம் வரை விலக்கு என்ற நடப்பு பட்ஜெட் சலுகை. மூன்று வருடம் பணம் எடுக்கத் தேவையில்லை (Lock In Period) என்றால், என்.பி.எஸ். திட்டம் சார்ந்த அரசு ஊழியர்கள் இச்சலுகையின் கீழ் பலன் பெறலாம்.
இது தவிர, பென்ஷன் ஃபண்ட் ஆணையம் (PFRDA) தற்போது அரசுக்குச் செய்துள்ள பரிந்துரையும் கவனிக்கத்தக்கது. அதாவது, தற்போது, பிரிவு 80 CCD(IB)-ன்கீழ், என்.பி.எஸ்ஸுக்குத் தரப்படும் வரிச்சலுகையின் அளவு ரூ.50,000. இதை ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும் என்கிறது பரிந்துரை. அரசால் ஏற்கப்படத்தக்க பரிந்துரை இது. இ.பி.எஃப்., சி.பி.எஃப்., சி.பி.எஸ். திட்டம் சார்ந்தவர்களும், இதர சம்பளதாரர்களும் இதன் மூலம் பயன் பெற முடியும்.
புதிய வட்டிச் சலுகை
நடப்பு நிதியாண்டின் முடிவு நாளான மார்ச் 31-ம் தேதிக்குள் பெறப்படும் இருவகைக் கடனுக்கான வட்டிச் சலுகை இது. அதாவது, வீட்டுக்கடன் பெறும் சம்பளதாரர்களுக்கு கடனுக்கான வட்டியில் ரூ.2 லட்சம் ரூபாய் வரை வரிச்சலுகை பெற்று வருகிறது. 2019 – 20 நிதியாண்டுக்குள் இதே வீட்டுக் கடன் பெறுவோர்க்கு, முன்னதாக அமலில் உள்ள இரண்டு லட்சம் ரூபாய் வரிச்சலுகையுடன் மேலும் 1.5 லட்சம் ரூபாய் வரை, வட்டிக்கான வரிச்சலுகை கிடைக்கும் என்பதும்,
நடப்பு நிதியாண்டுக்குள் மின் வாகனக் கடன் பெறும் சம்பளதாரர்களுக்கு, அவர்கள் கடனுக்காகச் செலுத்தும் வட்டியில், அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை பெறவும் செய்யலாம் என்பதும் கடந்த ஆகஸ்ட் மாதம் செய்யப்பட்ட அறிவுப்புகள் கூடுதல் சலுகைகள்!
இந்த இரண்டு சலுகைகளும் புதியவை என்பதால், என்னதான் சலுகைக் குறைப்பு நடைமுறைக்கு வந்தாலும், இந்தப் புதிய சலுகைகள், அறிவித்த மாத்திரத்திலேயே ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே, தேவைப்படுமாயின், வீட்டுக்கடன் மற்றும் மின் வாகனக் கடன்களை நிதியாண்டு முடிவதற்குள் பெற்றுவிட முயற்சி செய்யலாம். முன்னதாகக் கடன் கோரி விண்ணப்பித்திருந்து, கோரிய கடன் கைக்கு வராமல் இருந்தால், அதற்கான பரிசீலனையைத் துரிதப்படுத்த முயற்சி எடுக்கலாம்.
பிராவிடண்ட ஃபண்ட்
மேற்கண்ட புதிய சலுகைகள் தவிர, ஏற்கெனவே உள்ள அங்கீகரிக்கப்பட்ட பிராவிடண்ட் ஃபண்டுகளுக்கான சலுகை. அதாவது, அங்கீகரிக்கப்பட்ட ஜி.பி.எஃப்., சி.பி.எஃப்., இ.பி.எஃப் மற்றும் எத்தனையோ விதமான பிராவிடண்ட் ஃபண்டுகளில் செலுத்தப்படும் மாதாந்திர சந்தாவின் வட்டியானது 9.5 சதவிகிதத்துக்கு உட்பட்டு இருந்தால், அந்த வட்டித் தொகை எவ்வளவாக இருந்தாலும், அந்தத் தொகை வருமானம் என்ற கணக்கில் சேராது. வருமானக் கணக்கில் சேர்க்கப்படாததால் இதற்கு வரி விதிப்பும் கிடையாது.
எனவே, பிராவிடண்ட் ஃபண்ட் சந்தாவை இயன்ற அளவு அதிகரிப்பதன்மூலம், அதிகபட்ச வரிச்சலுகையைப் பெற முடியும். ஏனெனில் தற்போதைய அதிகபட்ச பி.எஃப் வட்டி 8.65% மட்டுமே.
ஒவ்வொரு நிதியாண்டிலும் மேற்கொள்ளப்படும் கடைசி நேர சேமிப்பு மற்றும் முதலீடுகள், அந்த நிதியாண்டுக்கு மட்டுமின்றி, அடுத்துவரும் நிதியாண்டுக்கும் பயன் தரக்கூடியதாக இருப்பது நல்லது. எனவே, பட்ஜெட் அறிவிப்பு வரை காத்திருந்து, நமக்கு ஒத்துவரக்கூடியதும், அதிக சலுகை தரக் கூடியதுமான முதலீட்டு வகைகளை தேர்வு செய்யலாம். அது மட்டுமல்ல –
வரப்போகிற பட்ஜெட் சலுகைகள் வழக்கமானவை அல்ல. பரிந்துரையின் பேரிலானவை என்பதால், பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகும் கூட, கோரிக்கைகளின் அடிப்படையில் சலுகைகள் அதிகரிக்கப்படலாம். பொறுமை அவசியம்.
வரி விகித ஒப்பீடு அட்டவணை
வரி சீரமைப்புக்குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிய வரும் வரி விகிதத்தோடு தற்போதைய வரி விகித ஒப்பீடு.
* 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை 5%
மாற்றமில்லை
* 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை 20%
10 லட்சம் வரை 10%
* 10 லட்சம் முதல் எத்தனை ரூபாயானாலும் 30%
10 லட்சம் - 20 லட்சம் வரை 20%
* 20 லட்சம் முதல் இரண்டு கோடிவரை 30%
மாற்றமில்லை
* இரண்டு கோடிக்கும் மேல் 30%
இரண்டு கோடிக்கு மேல் 35%
வருமான வரிச் சலுகைvikatanவருமான வாரியாக வரி செலுத்துவோர் எண்ணிகை அட்டவணை
* 5 லட்சம் வரை 4.8 கோடியினர்
* 5 லட்சம் - 10 லட்சம் வரை 2.1 கோடியினர்
* 10 லட்சம் - 20 லட்சம் வரை 60.4 லட்சம்
* 20 லட்சம் - 50 லட்சம் வரை 18.8 லட்சம்
* 50 லட்சம் - 1 கோடி 3.2 லட்சம்
* 1 கோடி - 5 கோடி வரை 1.3 லட்சம்
* 5 கோடி - 10 கோடி வரை 7.4 ஆயிரம்
* 10 கோடிக்கு மேல் 4.2 ஆயிரம்
- ப.முகைதீன் சேக்தாவூது
Source: விகடன்