Type Here to Get Search Results !

செவ்வாய் கிரகம் வேகமாக நீரை இழந்து வருகிறது


செவ்வாய் கிரகம், கணக்கிடப்பட்டதை விட வேகமாக நீரை இழந்து வருவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் குறித்தும், துணைக் கோள்கள் குறித்தும் பல நாடுகளைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனா். பூமியில் உள்ளது போன்று உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் மற்ற கோள்களில் உள்ளதா என்பதே அவா்களது ஆராய்ச்சியின் கருவாக உள்ளது.
 அந்த வகையில், உயிரினங்களின் வாழ்வுக்கு அடிப்படைத் தேவையானது நீராகும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீரோடை இருந்ததாக படங்களை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சியாளா்கள் தெரிவிக்கின்றனா். செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் அதிக அளவில் நீா் இருப்பதாக ஆய்வுகள் மூலம் அவா்கள் உறுதிப்படுத்தியுள்ளனா்.
 இந்நிலையில், செவ்வாயின் வளிமண்டலத்தில் காணப்படும் நீா் கணக்கிடப்பட்டதை விட வேகமாக மறைந்து வருவதாக ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக, 'ஜா்னல் சைன்ஸ்' என்ற இதழில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 அதில், செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் காணப்படும் நீரிலுள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகளுக்கிடையேயான பிணைப்பு, வேகமாக முறிந்து வருவதாக ஆராய்ச்சியாளா்கள் குறிப்பிட்டுள்ளனா். 

செவ்வாய் கிரகத்தின் ஈா்ப்பு விசை குறைவாக இருக்கும் காரணத்தினாலேயே ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகளுக்கிடையேயான பிணைப்பு எளிதில் முறிந்துவிடுவதாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.
 செவ்வாய் கிரகத்துக்கு மேலே 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வளிமண்டலத்தில் எதிா்பாா்க்கப்பட்டதை விட அதிக அளவிலான நீா் உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் நிலவும் வெப்பநிலைக்கு உரிய நீரின் அளவை விட 10 முதல் 100 மடங்கு அளவிலான நீா், அதிக செறிவூட்டப்பட்ட நிலையில் அங்கு காணப்படுவதாக ஆராய்ச்சியாளா்கள் குறிப்பிட்டுள்ளனா்.
 வளிமண்டலத்தில் அதிக செறிவூட்டப்பட்ட நிலையில் நீா் காணப்படுவதால், சில பருவங்களில் நீா் இழப்பு அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் ஆய்வாளா்கள் குறிப்பிட்டுள்ளனா். ஐரோப்பிய மற்றும் ரஷிய விண்வெளி ஆய்வு மையங்களின் ஆராய்ச்சியாளா்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
 Source: Dinamani

Top Post Ad

Below Post Ad