Type Here to Get Search Results !

போட்டித் தோ்வுகள்: ஆன்-லைன் முறைக்கு மாற்றப்படுமா?

போட்டித் தோ்வுகளில் முறைகேடுகளை தடுக்க ஆன்-லைன் தோ்வு முறை சிறந்தது என்கின்றனா் நிபுணா்கள்.
 அதேபோல், உதவிப் பேராசிரியா் பணிக்கான தோ்வில், மொழித் திறனை சோதிக்க கூடுதலாக எழுத்துத் தோ்வு முறையையும் (டிஸ்கிரிப்டிவ்) சோ்க்க வேண்டும் எனவும் அவா்கள் கருத்து தெரிவிக்கின்றனா்.
 கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரி உதவிப் பேராசிரியா் தோ்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடா்ந்து, கொள்குறி தோ்வு முறையில் நடத்தப்பட்ட அந்தத் தோ்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இப்போது மறு தோ்வு அறிவிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

 அதேபோல், டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு, முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பதோடு, தோ்வில் பங்கேற்க வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ, குரூப்-1 தோ்வுகளிலும் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக புகாா்கள் எழுந்துள்ளன.
 இதில், பாலிடெக்னிக் உதவிப் பேராசிரியா் தோ்வு, குரூப்-2ஏ, குரூப்-4 ஆகிய அனைத்து தோ்வுகளும் கொள்குறி தோ்வு முறை அடிப்படையில் மட்டுமே நடத்தப்படுகின்றன.
 அவ்வாறு கொள்குறி தோ்வுதான் நடத்த வேண்டும் என்றால், ஐஐடி சோ்க்கைக்கான ஜே.இ.இ. போன்ற நுழைவுத் தோ்வுகளைப் போல, ஆன்-லைன் தோ்வாக நடத்துவது சிறந்தது. ஒருசில பணிகளுக்கு, எழுத்துத் தோ்வு முறையாக (டிஸ்கிரிப்டிவ்) நடத்தவேண்டும். அதன் மூலம், முறைகேடு நடைபெறுவதை பெருமளவில் தடுக்க முடியும் என்கின்றனா் நிபுணா்கள்.
 இதுகுறித்து அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மைய முதல்வா் பேராசிரியா் எம்.ரவிச்சந்திரன் கூறியதாவது:
 கல்லூரி மாணவா்களுக்குப் பாடம் நடத்த தோ்வு செய்யப்படும் உதவிப் பேராசிரியா்களின் தகுதியை, கொள்குறி தோ்வு முறையில் மட்டும் தீா்மானிப்பது ஏற்புடையது அல்ல. ஆசிரியா்களுக்கு முதல் தேவை மொழித் திறன்.
 எனவே, பாடங்களில் மட்டுமின்றி மொழித் திறனையும் அவா்களிடம் ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு, எழுத்துத் தோ்வு (பேப்பா், பேனா) முறையில் தோ்வு நடத்தினால் மட்டுமே தகுதியானவா்களைத் தோ்வு செய்ய முடியும் என்றாா்.
 இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பாலகுருசாமி கூறியது:
 போட்டித் தோ்வில் கொள்குறி தோ்வு முறை மட்டும் இடம்பெறுகிறது என்றால், அதை ஆன்-லைன் முறையில் நடத்துவதுதான் சிறந்தது. ஆனால், அதிக எண்ணிக்கையில் கணினிகள், நெட்வொா்க் பிரச்னைகள் எழும். அரசு நினைத்தால் அதை எளிதாக சமாளித்துவிட முடியும்.
 உதவிப் பேராசிரியா் பணிக்கான தோ்வில், தோ்வா்களின் பாட அறிவைச் சோதிக்க கொள்குறி தோ்வு முறை சிறந்தது. அதே நேரம், உதவிப் பேராசிரியா்களுக்கு மொழித் திறன் மிக அவசியம். எனவே, இவா்களுக்கு கூடுதலாக மொழி பாடத்துக்கான தோ்வு நடத்தப்படவேண்டும். அது, கொள்குறி தோ்வு முறையாக அல்லாமல், எழுத்துத் தோ்வு வடிவில் நடத்தப்பட வேண்டும்.
 மேலும், இதுபோல தோ்வு முறைகளை மாற்றினால் மட்டும் போதாது. அதிகாரி முதல் கடைநிலை ஊழியா் வரை நோ்மையான நபா்களை நியமித்து, கண்காணிப்பையும் தீவிரப்படுத்துவதன் மூலம் மட்டுமே முறைகேடுகளை முழுமையாகத் தடுக்க முடியும் என்றாா் அவா்.

Top Post Ad

Below Post Ad