பெரணமல்லூர் அருகே அரசு பள்ளி மாணவி கண்களை துணியால் கட்டிக்கொண்டு 60 கி.மீ. தூரம் சைக்கிளில் பயணம் செய்து சாதனை படைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த முனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி குமரன். இவரது மகள் சுருதி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கண்களை துணியால் கட்டிக்கொண்டு ஓவியம் வரைதல், சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட சாதனையை செய்து வருகிறார்.அதன்படி, நேற்று மதியம் முனுகப்பட்டு கிராமத்தில் இருந்து வந்தவாசி வரை 60 கி.மீ. தூரம், சுருதி தனது கண்களை துணியால் கட்டிக்கொண்டு சைக்கிளில் சாதனை பயணம் மேற்கொண்டார்.
முன்னதாக, முனுகப்பட்டு மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் சுப்புராயன் மாணவி சுருதியின் சாதனை பயணத்தை தொடங்கி வைத்து ஊக்கமளித்தார். மாணவியின் பாதுகாப்பு வசதிக்காக ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் தன்னார்வலர்கள் பைக்கில் அவருடன் பயணம் செய்தனர். சுருதி கடந்த 23ம் தேதி திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி முன்னிலையில், ஒரு கி.மீ. தூரம் இதே சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.