Source Dinathanthi
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்–4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் தவறுகள் கண்டறியப்பட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதற்கிடையில் குரூப்–4 தேர்வு முறைகேடு நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து பல ஆண்டுகளாக படித்து தேர்வை நல்ல முறையில் எழுதி தேர்ச்சி பெற்று தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற தேர்வர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம், ‘சிலரின் தவறுகளுக்காக நன்றாக படித்து தேர்வு எழுதியவர்களை தண்டிப்பது நியாயமல்ல. தேர்வு ரத்து செய்யப்படாது. இது என்னுடைய கருத்து. ஆனால் டி.என்.பி.எஸ்.சி. என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதில் நாங்கள் தலையிடமுடியாது’ என்றார். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் என்ன நிலையில் இருக்கிறது என்பது குறித்து பத்திரிகை அலுவலகங்களுக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தரவரிசை பட்டியலில் இடம்பெற்றவர்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டு விவரம் கேட்டு வருகிறார்கள்.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் க.நந்தகுமாரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அவர் பதில் அளிக்கவில்லை. இதற்கு டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் முறையான பதிலை தெரிவிக்க வேண்டும் என்பதே தேர்வர்களின் முதன்மையான வேண்டுகோளாக இருக்கிறது.