43வது புத்தக திருவிழாவை சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 9ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். 750 அரங்குகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
43வது சென்னை புத்தக கண்காட்சி 9ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்க தலைவர் சண்முகம் கூறியதாவது:
43வது சென்னை புத்தக கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி 9ம் தேதி தொடங்கி வைக்கிறார். இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், அன்பழகன், கே.பாண்டிராஜன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். ஆசியாவின் மிகப்பெரிய புத்தக கண்காட்சியான சென்னை புத்தக காட்சி 9ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை 13 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 750க்கும் மேற்பட்ட அரங்குகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த முறை புத்தகங்கள் அனைத்தும் 10 சதவீத தள்ளுபடி விலையில், விற்பனை செய்யப்படும். சென்னையை சுற்றியுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட்டணமின்றி கண்காட்சிக்கு வரும் வகையில், இலசவ அனுமதி சீட்டு அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு நுழைவுகட்டணம் ரூ.10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் பயணஅட்டை உள்ளவர்கள் இலவசமாக புத்தக கண்காட்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு 20 லட்சம் வாசகர் வருவார்கள் என்றும், 20 கோடி அளவுக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வேலை நாட்களில் பிற்பகல் 3 மணி முதல் 9 மணி வரையிலும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தக கண்காட்சி நடைபெறும். தினந்தோறும், கவியரங்கம், பட்டிமன்றம், கவிதை வாசிப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 21ம் தேதி நடைபெறும் இறுதி நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு விருது வழங்குகிறார்.
இந்த ஆண்டு சிறப்பு நிகழ்வாக தமிழக தொல்லியல் துறை ஒத்துழைப்போடு, கீழடி ஈரடி என்ற அரங்கம் 3,000 சதுர அடி பரப்பில் அமைய உள்ளது. மேலும் எழுத்தாளர்கள், வாசகர்களை இணைக்கும் எழுத்தாளர் முற்றம் என்ற நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற 25 எழுத்தாளர்கள், தங்களின் படைப்புகளை அறிமுகம் செய்கின்றனர். ஜனவரி 8ம் தேதி ஒடிசாவை சேர்ந்த பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் திருவள்ளுவரின் உருவத்தை மணற் சிற்பமாக வடிவமைக்கிறார். இவ்வாறு கூறினார். இதில் பபாசி செயலாளர் முருகன், பொருளாளர் கோமதி நாயகம், நிர்வாகிகள் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.