சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அனைவரும் உடல் நலனை ஆரோக்கியமாக பராமரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் ஒரு பகுதியாக சென்னை ரன்னர்ஸ் உடன் இணைந்து நாளை (5-ந் தேதி) சென்னை மாரத்தான் ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் சென்னை மாரத்தானில் பங்கேற்கும் நபர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு பதிலாக அதிகாலை 3 மணி முதல் ரெயில் சேவையை வழங்க உள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சென்னை மாரத்தான் பங்கேற்பாளர்களின் வசதிக்காக கூடுதலாக நாளை 5-ந் தேதி அதிகாலை 3 மணி முதல் மதியம் 12 மணி வரை அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் வாகன நிறுத்தும் இடங்களை பங்கேற்பாளர்களுக்கு மட்டும் இலவசமாக வழங்குகிறது. அனைத்து ஓட்டப் பந்தயங்களும் நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இருந்து தொடங்கும். 10 கிலோ மீட்டர் தீர ஓட்டப் பந்தயம், தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரிக்கு அருகில் முடிவடையும். மற்ற ஓட்டப்பந்தய பிரிவுகள் கிழக்கு கடற்கரை சாலையில் முடிவடையும். அனைத்து மாரத்தான் ஓட்டங்களும் ஒன்றன்பின் ஒன்றாக அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை தொடங்கும். இந்த சென்னை மாரத்தான் ஓட்டம் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள சுழபதூர் ஏரியை தூர்வாரி செப்பனிடும் பணிக்காக நடத்தப்படுகிறது. மாரத்தான் 10 கிலோ மீட்டர், 21 கிலோ மீட்டர், 32 கிலோ மீட்டர் மற்றும் 42 கிலோ மீட்டர் என 4 பிரிவுகளாக நடத்தப்படுகிறது.