தூத்துக்குடி, மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 2-க்கு மேல் இருந்து, அதில் ஒரு வேட்பாளர் இறந்து விட்டால், அவருக்கு வழங்கப்பட்ட சின்னத்துடன் கூடிய வாக்குச்சீட்டை கொண்டு வாக்குப்பதிவு நடத்த வேண்டும். இறந்த வேட்பாளருக்கு வழங்கப்பட்ட சின்னம் வாக்குச்சீட்டில் எந்த இடத்தில் இருந்தாலும், அதனை மறைக் கவோ, நீக்கவோ கூடாது. இறந்த வேட்பாளரின் இறப்பு குறித்து வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வாக்குச்சாவடியில் சுவரொட்டி ஒட்டி விளம்பரப்படுத்த வேண்டும். 2 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடும் பட்சத்தில் ஒரு வேட்பாளர் இறந்தால், தேர்தல் ஆணையத்தின் அறிவுரையை பெற வேண்டும். அதேபோன்று பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர் இறந்து விட்டால், தமிழ்நாடு ஊராட்சிகள்(தேர்தல்கள்) விதிகள் 1995, விதி 36-ன்படி தேர்தலை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளரை தவிர மற்ற வேட்பாளர்கள் இறந்துவிட்டால், அவருக்கு வழங்கப்பட்ட சின்னத்துடன் கூடிய வாக்குச்சீட்டை கொண்டு வாக்குப்பதிவு நடத்த வேண்டும். அவர் இறந்தது தொடர்பாக அறிவிப்பை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் சுவரொட்டி ஒட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.