இன்றைய தொழில்நுட்ப உலகில் சர்வமும் ஆன்லைனில் வாங்குவது சாதாரண நிகழ்வாகிவிட்டது. வீடு, அலுவலகம், தனி மனிதனுக்கு தேவையான பொருட்கள் என அத்தனையுமே ஆன்லைனில் விற்பனைக்கு வந்துவிட்டன.
இந்நிலையில் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் விற்கப்படும் பொருட்களுக்கு வழங்கப்படும் ஸ்டார் ரேட்டிங், காசு கொடுத்து போலியாக பதிவிடப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமேசானில் விற்கப்படும் பொருட்களுக்கு அளிக்கப்படும் போலி மதிப்பீடுகளால் பயனர்கள் மோசமான பொருட்களை வாங்கி ஏமாற்றப்படுவதாக கூறப்படுகிறது. டெய்லி மெயில் என்ற ஊடகம் நடத்திய புலனாய்வில் அமேசான் இணையத்தில் விற்கப்படும் பொருட்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உயர்ந்தபட்ச மதீப்பீடு ( 5 அல்லது 4 ஸ்டார் ரேட்டிங்) , சில சந்தைப்படுத்தல் நிறுவனங்களால் வெறும் ரூ.1,200 க்கு விற்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சில சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் இதற்காக தங்களிடம் உள்ள testers-ஐ பயன்படுத்துவதும், இதற்காக அவர்களுக்கு ஒரு சிறிய கட்டணம் வழங்குவதும் தெரிய வந்துள்ளது. மேலும் பொருட்கள் வாங்கும் செலவு திரும்ப அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இதற்காக அவர்கள் செய்ய வேண்டியது குறிப்பிட்ட பொருட்கள் குறித்து உயர்மதிப்பீடு அளித்து, வாடிக்கையாளர்கள் நம்பி வாங்கலாம் என பரிந்துரைப்பதே.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒரு சந்தைப்படுத்தல் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர், ஒரு வேளை விற்பனையாளர்ளுக்கு நாங்கள் பதிவிடும் கருத்துகள் பிடிக்கவில்லை என்றால், எங்கள் tester person-ஐ மாற்றிவிடுவோம். இது உண்மையில் சட்டபூர்வமானது அல்ல, ஆனால் அது உண்மையில் சட்டவிரோதமானதும் அல்ல என கூறியுள்ளார்.
மேலும் 5 மற்றும் 4 ஸ்டார் ரேட்டிங் கலந்து தான் பதிவிடுவோம். அனைத்துமே 5 ரேட்டிங் கொடுக்கப்பட்டால் அது சந்தேகத்திற்குரியதாகிவிடும் என கூறி அதிர வைத்துள்ளார். சுமார் 2000 பேரிடம் டெய்லி மெயில் நடத்திய கருது கணிப்பில் அதில் 97 சதவீதம் பேர் ஸ்டார் ரேட்டிங் வைத்து தான் தங்கள் பொருட்களை வாங்குவதாக கூறியுள்ளனர்.
இதனிடையே மதிப்புரைகளின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும், துஷ்பிரயோகம், மோசடி மற்றும் பிற முறைகேடுகளிலிருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க கடந்த ஆண்டில் 300 மில்லியன் பவுண்டுகள் செலவிட்டதாகவும் அமேசான் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர் ஒருவர் பணத்திற்காக போடப்படும் தவறான உயர் ரேட்டிங்கை பார்க்கும் முன்னரே அதை கண்டறிந்து அகற்றுவதே எங்கள் நோக்கம். கடந்த மாதத்தில், வாடிக்கையாளர்கள் வாசித்த மதிப்புரைகளில் 99 சதவீதத்திற்கும் அதிகமானவை உண்மையானவை என்று அமேசான் செய்தித் தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்