Type Here to Get Search Results !

ரயில் கட்டணம் உயர்வு: புறநகர் ரயில்களுக்கு மாற்றமில்லை

ரயில் பயணச்சீட்டு கட்டணத்தை இந்திய ரயில்வே உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 

இதுதொடர்பாக இந்திய ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவின்படி, புறநகர் ரயில்களில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதேபோல், புறநகர் ரயில்கள் மற்றும் புறநகர் அல்லாத ரயில்களுக்கான சீசன் பயணச்சீட்டு கட்டணமும்  உயர்த்தப்படவில்லை. 

புறநகர் அல்லாத, ஏ.சி. இல்லாத சாதாரண ரயில்களில் இரண்டாம் வகுப்பு, படுக்கை வகுப்பு, முதல் வகுப்பு ஆகியவற்றுக்கான பயணக் கட்டணம் கிலோ மீட்டருக்கு 1 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. 

மெயில் மற்றும் ஏ.சி. இல்லாத விரைவு (எக்ஸ்பிரஸ்) ரயில்களுக்கான இரண்டாம் வகுப்பு, படுக்கை வகுப்பு, முதல் வகுப்பு பயணக் கட்டணத்தில் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. 

ஏ.சி. வகுப்புகளில் சேர் கார், 3 அடுக்கு, 2 அடுக்கு, முதல் வகுப்பு ஆகிய பிரிவுகளுக்கான பயணக் கட்டணத்தில் கிலோ மீட்டருக்கு 4 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. 

பிரீமியம் ரயில்களிலும்…: 

சதாப்தி, ராஜதானி, துரந்தோ உள்ளிட்ட பிரீமியம் ரயில்களிலும் இந்தக் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், முன்பதிவுக் கட்டணமோ, அதிவிரைவு சேவைகளுக்கான கட்டணமோ உயர்த்தப்படவில்லை. 

ஏற்கெனவே (2020 ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன்பாக) முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பயணச் சீட்டுகளுக்கான கட்டணம் உயர்த்தப்படாது என்று ரயில்வே தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இந்திய ரயில்வே தனது அந்த உத்தரவில் மேலும் கூறியுள்ளதாவது: 

ரயிலை அன்றாடப் போக்குவரத்துக்குப் பயன்படுத்துவோரின் வசதிக்காக புறநகர் ரயில்களுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்திய ரயில்வேயை பயன்படுத்தும் பயணிகளில் 66 சதவீதத்தினர், புறநகர் ரயில் பயணிகளாவர். 

இந்தக் கட்டண உயர்விலிருந்து கிடைக்கும் வருவாய், இந்திய ரயில்வேயை நவீனப்படுத்தும் பணிகளுக்காக பயன்படுத்தப்படும். ரயில் பெட்டிகளை நவீனப்படுத்துவதன் மூலமாகவும், ரயில் நிலையங்களின் வசதிகளை மேம்படுத்துவதன் மூலமாகவும் பயணிகளுக்கான அனுபவத்தை திருப்திகரமானதாக மாற்ற ரயில்வே முயற்சித்து வருகிறது. 

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளினால் இந்திய ரயில்வேக்கு ஏற்பட்டுள்ள சுமையை குறைக்கும் விதமாக இந்தக் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. 

ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கான வசதியை அதிகரிப்பதற்காக இந்தக் கட்டண உயர்வை அமல்படுத்த வேண்டியது கட்டாயமாகிறது. கட்டண மாற்றியமைப்பு நடவடிக்கையின் மூலம் ரயில்வேயை விரைவாக நவீனப்படுத்தும் இலக்கு எட்டப்படும் என்று இந்திய ரயில்வே தனது உத்தரவில் கூறியுள்ளது. 

முன்னதாக, பயணிகள் ரயில் கட்டணத்தையும், சரக்கு ரயில் கட்டணத்தையும் முறைப்படுத்த இருப்பதாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே. யாதவ் சமீபத்தில் கூறியிருந்த நிலையில், தற்போது ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

கட்டண உயர்வு விவரம் (1கி.மீ.) 

புறநகர் அல்லாத, ஏ.சி. இல்லாத சாதாரண ரயில்கள்

2-ஆம் வகுப்பு     1 பைசா
படுக்கை வகுப்பு     1 பைசா
முதல் வகுப்பு     1 பைசா

மெயில்/விரைவு ரயில்கள் 

2-ஆம் வகுப்பு     2 பைசா
படுக்கை வகுப்பு    2 பைசா
முதல் வகுப்பு     2 பைசா

ஏ.சி. வகுப்புகள்

“சேர் கார்’    4 பைசா
3 அடுக்கு     4 பைசா
2 அடுக்கு     4 பைசா
முதல் வகுப்பு    4 பைசா

புறநகர் ரயில்கள் 
(ஒருமுறை பயணக் கட்டணம்) – மாற்றமில்லை.

சீசன் பயணச் சீட்டுகள் 
(புறநகர் ரயில்கள், புறநகர் அல்லாத ரயில்கள்) – மாற்றமில்லை.


Top Post Ad

Below Post Ad