தூத்துக்குடி மாவட்டத்தில் இருகட்டமாக தேர்தல் நடந்தது. இதில் முதல் கட்டத் தேர்தல் கடந்த 27 அன்று முடிந்தது. அன்றைய தினம் தூத்துக்குடி சாத்தான்குளம், திருச்செந்தூர் உள்ளிட்ட 7 ஒன்றியங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் சாத்தான்குளம் ஒன்றியம், நெடுங்குளம் ஊராட்சிப் பதவிகளுக்கான வாக்குப்பதிவையொட்டி வேலன் புதுக்குளம் கிராமத்தின் பள்ளியின் 27ம் எண் பூத் ஆண் பெண் இருபாலர்களுக்காக அமைக்கப்பட்டிருந்தது. இந்த பூத்தில் கள்ள வாக்குகள் பதிவானது என்று வந்த புகார் தொடர்பாக நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது. அதற்கு தேர்தல் ஆணையமும் ஒப்புதலளித்துள்ளது.
இதனிடையே விதிமுறைகளை மீறி கள்ள வாக்குகள் போட்டதாக வேலன் புதுக்குளத்தைச் சார்ந்த முத்துமாலை, பரமசிவன் இருவரையும் கைது செய்த போலீசார் கண்ணன், செந்தூர் பாண்டி இருவரையும் தேடி வருகின்றனர். அதே சமயம் இந்த பூத்தில் கள்ள வாக்குப் பதிவினை அனுமதித்ததோடு, அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்காமல் பணியில் மெத்தனமாகச் செயல்பட்ட அந்த பூத்தின் தலைமை தேர்தல் அலுவலரான நாசரேத் மார்காஷிஸ் பள்ளி ஆசிரியர் சார்லஸ் திரவியம், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையப் பெண் போலீஸ் ஏட்டு முருகேஸ்வதி இருவரையும் தூத்துக்குடி மாவட்டத் தேர்தல் அதிகாரியான ஆட்சியர் சந்தீப் நந்தூரி சஸ்பெண்ட் செய்து ஆணை பிறப்பித்திருக்கிறார். இந்த அதிரடி நடவடிக்கை பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
Source: Nakkeeran