சுற்றுலா பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ள அறநிலையத்துறை அரங்கில், காஞ்சி அத்தி வரதர் தரிசனம், பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.சென்னை, தீவுத்திடலில், அரசின், 46வது சுற்றுலா பொருட்காட்சி துவக்கப்பட்டுள்ளது. இதில், அரசின் துறைகள் சார்பில், 20க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், கோவில் திட்டங்கள் தொடர்பான மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன.காஞ்சிபுரத்தில், இந்த ஆண்டு நிகழ்ந்த அத்தி வரதர் வைபவத்தை, மீண்டும் கண்முன் நிறுத்தும் வகையில், அத்தி வரதர், நின்றான், கிடந்தான் கோலத்தில் அருள் பாலிக்கிறார். இக்காட்சி, பார்வையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.அதேபோல, கருவறையில் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரங்க முகப்பில், திருவானைக்காவல், கார்த்திகை கோபுரம் அமைக்கப்பட்டு, அதில், ஜம்புகேஸ்வரரை அம்பாளும், யானையும் பூஜிப்பதுபோல் சுதை வடிவ சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.அரங்கின் உட்புறம் தேரோட்டக் காட்சி, தெப்ப உற்சவமும், தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. திருக்கோவில்களில் நடைபெறும் வளர்ச்சி பணிகள், பக்தர்களுக்கான வசதிகள் குறித்த மாதிரிகள், 12 தலைப்புகளில் அமைக்கப்பட்டுள்ளன. அறநிலையத்துறை அரங்கை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு, பிரசாதங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.