உலகின் பிரபல தகவல் தொடர்பு சாதனமாக விளங்கும் வாட்ஸ் அப் தற்போது மீண்டும் ஒரு பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் அங்கமான வாட்ஸ் அப் உலகின் பிரபல தகவல் தொடர்பு சாதனமாக விளங்கி வருகிறது. உலகமெங்கும் ஒருநாளில் 150 கோடி பயனாளர்கள் சராசரியாக 6500 கோடி செய்திகளை பரிமாறிக் கொள்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் வாட்ஸ் அப் தற்போது மீண்டும் ஒரு ஹேக்கர் தாக்குதல் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதுதொடர்பாக 'செக் பாய்ண்ட்' என்னும் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஓடேட் வனுன்னு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
வாட்ஸ் அப் குரூப் சாட்டுகளில் ஹேக்கர்கள் ஒரு குறிப்பிட்ட அபாயாகரமான தகவலை அனுப்பியவுடன் ஒட்டுமொத்த க்ரூப் மெசேஜுகளுமே அழிந்து போகும் அபாயம் உள்ளது. அவ்வாறு நிகழ்ந்துவிட்டால் பயனாளர்கள் தங்களது அலைபேசியிலிருந்து வாட்ஸ் அப்பை நீக்கி விட்டு மீண்டும் தரவிறக்கம் செய்து நிறுவுவது ஒன்றே செயல்படச் செய்யும் வழியாகும்.
இதிலிருந்து தப்பிக்க பயனாளர்கள் தங்களது வாட்ஸ் அப்பை உடனடியாக அப்டேட் செய்து கொள்ள வேண்டும். இதற்காக வாட்ஸ் அப் நிறுவனமானது புதுப்பிக்கப்பட்ட 2.19.58 என்ற பெயருடைய பதிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப் மற்றும் வெப் வாட்ஸ் அப் இரண்டுக்குமிடையான செயல்பாடுகளை கண்காணித்து இந்தக் குறைபாட்டை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.