பெரியநாயக்கன் பாளையம், துடியலுார் வட்டாரத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவிகளுக்கு, காவலன் செயலியின் பயன் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து, போலீசார் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கப் பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழகக் காவல்துறை எடுத்துவருகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு செயல்பட்டுவருகிறது.அதோடு, தமிழக காவல்துறை அறிமுகம் செய்துள்ள, காவலன் செயலியும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பயன்படுகிறது.அவசர தேவை காலகட்டத்தில், பெண்கள், காவலன் செயலி மூலம் தகவலைத் தெரிவித்தால், அடுத்த, ஐந்து நிமிடங்களுக்குள், சம்பவ இடத்துக்கு போலீஸ் டீம் வந்துவிடும்.இதனால் காவலன் செயலி இன்று பெரும்பாலான பெண்களின் மொபைல்போன்களில் இருக்க வேண்டியது அவசிமாகியுள்ளது. இந்த செயலி குறித்து, பள்ளி, கல்லுாரி மாணவிகளுக்கு பெரியநாயக்கன் பாளையம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.போலீசார் கூறியதாவது:மாநிலம் முழுவதும் உள்ள கட்டுப்பாட்டு அறைகள், சென்னையில் உள்ள மாநில போலீஸ் மாஸ்டர்ஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இக் கட்டுப்பாட்டு அறை, 24 மணி நேரமும் இயங்கும்.இதில், காவல் கட்டுப்பாட்டு அறையில், பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள் பணியில் உள்ளனர். இக்குழுவினர் காவலன் செயலி வாயிலாக, பெறும் புகார்களை மறுஆய்வு செய்வது, தகவல்களை உடனடியாக சரியான கட்டுப்பாட்டு அறை, காவல் நிலையம், ரோந்து பணியில் உள்ள காவல் துறையினருக்கு அனுப்புவர்.காவல் துறையினர் எங்கு இருந்தாலும், உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, பாதிப்பிலிருந்து புகார்தாரரை காப்பர். இயற்கை பேரழிவுகள் போன்ற, அவசர காலங்களிலும், இச்செயலியை பயன்படுத்தலாம்.இந்த செயலியை மொபைல் போன், பிளே ஸ்டோரில் இருந்து, டவுன்லோடு செய்து பயன்படுத்த லாம். மொபைல் போன் முகப்புத்திரையில், காவலன் செயலி எஸ்.ஓ.எஸ்., என்ற பட்டனுடன் தெரியும். ஆபத்து காலத்தில், அதை அழுத்தியவுடன், 5 வினாடிகளுக்கு பின், பாதிப்புக்குள்ளான நபரின் இருப்பிடம், ஜி.பி.எஸ்., வாயிலாக போலீசாருக்கு சென்று விடும். போலீசார் உடனடியாக தொடர்பு கொள்வர்.அதே நேரம் பாதிப்புக்குள்ளான நபரின் இருப்பிடம் குறித்து, முன்பதிவு செய்யப்பட்ட, அவசர கால தொடர்புகளுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்., எச்சரிக்கையாக அனுப்பப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.