தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாநிலத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லுாரும் குறைந்த வாக்காளர்கள் கொண்ட துறைமுகமும் அறிவிக்கப்பட்டுள்ளது
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-
வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து மாவட்டங்களிலும் நேற்று வெளியிடப்பட்டது. இதனை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டனர். இது தேர்தல் கமிஷனின் election .tn. gov. in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலானது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும். பொதுமக்களின் பார்வைக்கும் வாக்காளர் பட்டியல் வைக்கப்படும். தமிழ்நாட்டில் தற்போது 6 கோடியே ஆயிரத்து 329 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை 2 கோடியே 96 லட்சத்து 46 ஆயிரத்து 287 ஆகும் பெண்கள் வாக்காளர்கள் எண்ணிக்கை 3 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 118 ஆகும்,. மூன்றாம் பாலினத்தவர் 5 ஆயிரத்து 924 பேர் உள்ளனர்.
தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் விளங்குகிறது. இங்கு 6 லட்சத்து 46 ஆயிரத்து 73 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3 லட்சத்து 25 ஆயிரத்து 28 பேர். பெண்கள் 3 லட்சத்து 20 ஆயிரத்து 963 மூன்றாம் பாலினத்தவர் 82 பேர். மாநிலத்திலேயே குறைந்த வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதியாக துறைமுகம் விளங்குகிறது. இந்த தொகுதியில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 620 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 483. பெண்கள் 81 ஆயிரத்து 87 ஆகும். வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதலுக்கு ஜனவரி 22-ம் தேதி கடைசி நாளாகும்.
1.1-2020 அன்று 18 வயது நிறைந்திருக்கும் அனைவரும் வாக்காளராக தகுதியுடையவர்கள். வாக்காளர்களுக்கு உதவ ஹெல்ப் லைன், மொபைல் ஆப் மூலம் வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம். வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் வரும் ஜனவரி மாதம் நான்கு நாட்கள் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஜனவரி 4, 5 மற்றும் 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் அனைத்து வாக்குசாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
புதிய வாக்காளர்கள் சேர்த்தல் நீக்கல் மற்றும இடமாற்றங்கள் செய்யவோ விரும்பும் வாக்காளர்கள் அல்லது தகுதியுள்ள குடிமக்கள் படிவங்கள் 6,7, 8 அல்லது 8 ஏ ஆகியவற்றை பூர்த்தி செய்து அளிக்கலாம். பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன் வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்பிக்கப்பட வேண்டும். பாஸ்போட் , ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை அரசு அல்லது அரசு பொதுத்துறை பணியாளர்களுக்கு மேற்படி நிறுவனங்களின் முலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம், நிரந்தர கணக்கு எண் அட்டை. உழவர் அடையாள அட்டை, ஆர்.ஜி.ஐ. வழங்கிய என்.பி.ஆர். ஸ்மார்ட் அட்டை, சமீபத்திய குடிநீர் - தொலைபேசி மின்சாரம் சமையல் எரிவாயு இணைப்பு ரசீது ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை முகவரி சான்றாக தாக்கல் செய்யலாம். வயது சான்றாக பிறப்பு சான்றிதழின் நகல் அல்லது பள்ளிச்சான்றிதழின் நகலை வழங்கலாம். 25 வயதுக்கு கீழுள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை வழங்க வேண்டியது கட்டாயமாகும். www.nusp.in என்ற இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி கைபேசி செயலி ( voter help line mobile app) ஆகிய ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்காளரின் பெயர், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தும் அவருடைய வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்திருந்தால் வட்டாட்சியர் மண்டல அலுவலகத்தில் படிவம் 001 – விண்ணப்பிக்கலாம்.
வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6 ஏ நேரில் அளிக்கப்பட வேண்டும். அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிக்கு தபாலிலும் படிவத்தை அனுப்பலாம். வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6 ஏ நேரில் அளிக்கப்படும் போது அதனுடன் விண்ணப்பதாரரின் புகைப்படம், ஏனைய பிற விவரங்களுடன் விசாவின் செயல்திறன் பற்றிய மேற்குறிப்பு அடங்கிய பாஸ்போட்டின் தொடர்புடைய பக்கங்களின் ஒளிநகலை சேர்த்து அளிக்க வேண்டும். வாக்காளர் பதிவு அதிகாரி மூல பாஸ்போர்ட்டின் ஒப்பீட்டை சரிபார்த்து உடனடியாக திரும்ப கொடுத்து விடுவார் படிவம் 6 ஏ தபாலில் அனுப்பப்படும் போது கடவு சீட்டின் ஒளிநகல்கள் சுய சான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு அறிவித்துள்ளார்.