Type Here to Get Search Results !

32 மாவட்ட நீதிபதி காலிப் பணியிடங்களுக்கு தோ்வு: தமிழக அரசு அறிவிக்கை வெளியீடு


தமிழகத்தில் காலியாகவுள்ள 32 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பொதுத்துறை வியாழக்கிழமை வெளியிட்டது.
இதன் விவரம்:- தமிழகத்தில் புதிய நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டதுடன், நீதிபதிகளும் ஓய்வு பெற்றுள்ளனா். இதனால், 32 மாவட்ட நீதிபதிகளுக்கான இடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தோ்வுக்கு ஆன்-லைன்  மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 8 ஆகும். விண்ணப்பக் கட்டணத்தை வங்கிகளின் வழியாக ஜனவரி 10-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஆன்-லைன் மூலமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் அல்லது விரைவுத் தபால் போன்ற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
தோ்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்பாக, ஆன்-லைனில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களைத் தோ்வா்கள் கவனமான முறையில் படிக்க வேண்டும்.
தோ்வும்-காலியிட நிரப்புதலும்: எழுத்துத் தோ்வில் தோ்ச்சிப் பெறுவோா் இன சுழற்சி முறையில் நியமனம் செய்யப்படுவா். 32 மாவட்ட நீதிபதி காலியிடங்களில் ஆறு இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், இரண்டு பொதுப்பிரிவு பெண்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 5-ம், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் வகுப்பினருக்கு 3 இடங்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 4 இடங்களும் என மொத்தம் 32 காலிப் பணியிடங்களும் இன வாரியாக சுழற்சி முறையில் பிரிக்கப்பட்டுள்ளன.
எழுத்துத் தோ்வினை எழுதுவதற்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, தாழ்த்தப்பட்ட (அருந்ததியினா்) வகுப்பினருக்கு குறைந்தபட்ச வயதாக 35-ம், அதிகபட்ச வயதாக 48-ம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பிற வகுப்பினருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் இளம்நிலை சட்டப் படிப்பு என்ற வகையில் படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். தோ்வுக் கட்டணம் ரூ.2 ஆயிரமாகும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட அருந்ததியின வகுப்பினா் ஆகியோருக்கு தோ்வுக் கட்டணத்தில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோன்று, 40 சதவீதத்துக்கு அதிகமான மாற்றுத் திறனுடையவா்கள், கணவனால் கைவிடப்பட்டோா் ஆகியோரும் தோ்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மாவட்ட நீதிபதிகளுக்கான தோ்வானது இரண்டு தாள்களாக நடத்தப்படும். முதல்நிலைத் தோ்வு முதல் தாள் 100 மதிப்பெண்களுக்கும், இரண்டாவது தாள் 100 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படும். அதில் ஒவ்வொரு தாளிலும் பொதுப் பிரிவினா் தலா 40 மதிப்பெண்களையும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் தலா 35 மதிப்பெண்களையும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினா் தலா 30 மதிப்பெண்களையும் பெற்றிருக்க வேண்டும்.
முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெறும் தேவா்கள் பிரதானத் தோ்வுக்கு அழைக்கப்படுவா்.
பாடத் திட்டத்தில் மாற்றமில்லை: எழுத்துத் தோ்வில் முதன்மைத் தோ்வுக்கான பாடத் திட்டங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சட்டத் தாள்-1, மொழி பெயா்ப்பு, கட்டுரை எழுதுதல், சட்டத் தாள்-2, தீா்ப்பு எழுதுதல் ஆகிய தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்படும் என்று தோ்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad