Type Here to Get Search Results !

தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும், கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 20,21ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. ஏறத்தாழ 4 மாதங்கள் பெய்ய வேண்டிய இந்த பருவமழை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இந்த  ஆண்டு புயல்கள் ஏதும் வங்கக் கடலில் உருவாகவில்லை. இருப்பினும் தமிழகம் மற்றும் கேரள எல்லையையொட்டி நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. காற்றழுத்தம், வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்தாலும் இந்த காலத்தில் தமிழகத்தில் பெய்ய வேண்டிய இயல்பு அளவான 44 செ.மீட்டர் அளவுக்கு மழை தற்போது பெய்துள்ளது.

இதனால் பெரும்பாலான  நீர்நிலைகள் நிரம்பியும் உள்ளன. இந்நிலையில், கேரளா, தமிழக எல்லையை ஒட்டிய பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சியானது தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும். நகரின் சில இடங்களில்  லேசான மழை பெய்யும். வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உருவாகி வருகிறது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நகர்வதை பொறுத்து மழையின் அளவு அமையும். மேலும் இந்த கனமழை பெய்வது எந்தெந்த பகுதிகளில் என்பது மேலடுக்கு சுழற்சியின் நகர்வை பொறுத்து தான் தெரியவரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காமராஜர் சாலை,  சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மெரினா, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இன்று  காலை முதல் கனமழை பெய்தது. இதனால் ஜில்லென்ற சீதோஷ்ணம் நிலவி வருவதால்  மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்


Top Post Ad

Below Post Ad