Type Here to Get Search Results !

ரூ.1,000 பொங்கல் பரிசு: டிச.20 முதல் வினியோகம்


ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை டிச. 20 முதல் வினியோகம் செய்ய கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.

ரொக்க பணம்

தமிழக அரசு 2.05 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு ரேஷன் கார்டு தாரருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி சர்க்கரை; தலா 20 கிராம் முந்திரி திராட்சை; 5 கிராம் ஏலம்; கரும்பு துண்டு 1000 ரூபாய் ரொக்கப்பணம் போன்றவை வழங்கப்பட உள்ளன. பொங்கல் பரிசு தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கும் பணியை முதல்வர் பழனிசாமி நவம்பர் 29ல் துவக்கி வைத்தார். மறுநாள் பல கார்டுதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு கேட்டனர். அவை வழங்கப்படாததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

ரேஷன் கடைகளில் எப்போது முதல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசும் தெரிவிக்கவில்லை. இதனால் பலரும் பரிசு தொகுப்பை எதிர்பார்த்தபடி உள்ளனர். தற்போது முந்திரி திராட்சை ஏலத்தை கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்து பாக்கெட் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. விவசாயிகளிடம் இருந்து கரும்பு வாங்கப்பட்டு வரும் நிலையில் கூட்டுறவு வங்கிகளில் தேவைக்கு ஏற்ப 500 ரூபாய் நோட்டுக்களும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.

சாதகமாகும்

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் 'பொங்கல் பரிசு வழங்க தடையில்லை' என மாநில தேர்தல் ஆணையமும் தெரிவித்துள்ளது. ஓட்டுப்பதிவுக்கு முன் கார்டுதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கினால் தான் தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என அ.தி.மு.க.வினர் கருதுகின்றனர். இந்த விபரத்தை கூட்டுறவு சங்க தலைவர்களாக உள்ள ஆளுங்கட்சியினர் அரசிடம் தெரிவித்துள்ளனர். இதனால் டிச. 20 முதல் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.

*வணக்கம் இந்தியா நிருபர் வேப்பம்பட்டி சுகன்யா த.முரளிதரன்*


Top Post Ad

Below Post Ad