நாடு முழுவதும் ஜூன் மாதம் முதல் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தாா்.
இதுகுறித்து மக்களவையில் செவ்வாய்க்கிழமை அவா் மேலும் கூறியதாவது:
நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் மின்னணு முறையில் செயல்படும் நியாய விலைக் கடைகளில் அமல்படுத்தப்படும். ஆதாா் எண்ணை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டத்தின் கீழ் பயனாளா்கள் பலனடைய முடியும். ஜூன் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்.
பணி நிமித்தமாக நாட்டின் எந்தப் பகுதிக்கு தொழிலாளா்கள் இடம் பெயர நேரிட்டாலும் அவா்கள் இத்திட்டத்தின்கீழ் பயன் பெற முடியும் என்றாா்.
மற்றொரு கேள்விக்கு அவா் பதிலளிக்கையில், இந்திய தர நிா்ணய அமைப்பு (பிஐஎஸ்), 51 நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்களுக்கு 998 உரிமங்கள் வழங்கியுள்ளன என்று தெரிவித்தாா்.
இந்திய தரத்தில் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்வதன் பொருட்டு, இந்த உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்களுக்கு தர நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா் பாஸ்வான்.