பள்ளி மாணவியின் ஷூவுக்குள் பதுங்கி இருந்த நாகப்பாம்பை தக்க நேரத்தில் கண்டதால் மாணவி நூலிலையில் உயிர் தப்பிய சம்பவம் திருவனந்தபுரம் அருகே நடந்துள்ளது.
மழை காலம் நெருங்கி வரும் நிலையில் பள்ளி செல்லும் சிறார்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி ..
திருவனந்தபுரம் அடுத்த கரிக்ககொம் கோவில் பகுதியை சேர்ந்த 7 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் சம்பவத்தன்று பள்ளிக்கு புறப்படுவதற்காக தனது ஷூவை எடுத்து காலில் அணியமுயன்றுள்ளார்.
அப்போது ஷூவுக்குள் பாம்பு ஒன்று நெழிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஷூவை கீழே தூக்கி வீசியுள்ளார். அவரது தாய் பாம்பு தப்பி விடக்கூடாது என்பதற்காக பாத்திரத்தை போட்டு ஷூவை மூடிவிட்டு பிரபல பாம்பு பிடி நிபுணர் வாவாசுரேஷ் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அங்கு விரைந்து சென்ற வாவா சுரேஷ் அந்த பாத்திரத்தை நகர்த்திவிட்டு, ஷூவை கையில் எடுத்து பார்த்தார். உள்ளே குட்டி நாகப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது
ஷூவுக்குள் இருந்து சீறிக்கொண்டு வேகமாக வெளியே வந்த குட்டி நாகத்தை லாவகமாக பிடித்தார் வாவா சுரேஷ்
அவரது கையில் சீறிக்கொண்டு இருந்த குட்டிப்பாம்பை டைல்ஸ் தளத்தில் விட்டதும் அதனால் ஊர்ந்து செல்ல இயலாமல் தவித்தது
பின்னர் அந்த பாம்பை பத்திரமாக அங்கிருந்து பிடித்துச் சென்ற வாவா சுரேஷ், பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் காலணிகளை அணிவதற்கு முன்பாக வெளியில் வைத்து நன்றாக கீழே தட்டிப்பார்த்து விட்டு அதன் பின்னர் வீட்டுக்குள் எடுத்து வந்து அணிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் மழை காலம் தொடங்க உள்ள நிலையில் இந்த எச்சரிக்கை நம்ம ஊரு மாணவர்களுக்கும் பொருந்தும்.
மாணவர்கள் பள்ளியில் இருந்து வந்தவுடன் தங்கள் ஷூக்களை வீட்டுக்கு வெளியே தரையில் கழட்டி போட்டு செல்வது வழக்கம். அதனால் மழை கால இரவில் ஷூக்கள் தவளை, எலி போன்றவை பதுங்கும் இடமாக போய்விடும், இறையை தேடி வரும் பாம்புகளுக்கும் அது பதுங்கும் இடமாக மாறிவிடும்.
எனவே ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்து வந்ததும் தங்களது காலணிகளை எந்த ஒரு பூச்சிகளும் புகாத வண்ணம் உயரமான இடத்தில் பத்திரப்படுத்தி வைப்பது நல்லது.
அதே போல ஷூக்களை நன்றாக தட்டி விட்டு அவற்றை அணிவது தான் எப்போதுமே நன்மை பயக்கும். கொஞ்சமாக தண்ணீர் தேங்கி இருக்கும் இடத்தில் ஷூக்களுடன் இறங்கி செல்வதை தவிருங்கள். அதில் சகதி இருந்தால் நிலை தடுமாறி உள்ளே விழும் நிலை ஏற்படலாம்.
மின் கம்பி அறுந்து கிடந்தால் அந்தவழியாக செல்ல வேண்டாம். கூடுமானவரை மழைகாலங்களில் திடீர் குட்டையாக மாறி உள்ள நீருக்குள் இறங்கி விளையாடுவதை தவிர்ப்பதும் சிறுவர்களுக்கு நலம் பயக்கும். மழை பெய்தால் நனையாமல் வீடு திரும்ப வேண்டும் என்றால், பள்ளி பையுடன் குடை ஒன்றை கட்டாயம் எடுத்துச்செல்வது அவசியம்..!
இவற்றை கடைபிடித்தால் மழை கால விபத்துக்கள் மட்டும் அல்ல நோய்களில் இருந்தும் கத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.