சென்னை, தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-தமிழக உள்துறை செயலாளராக பணியாற்றிய நிரஞ்சன் மார்டி நேற்று ஓய்வுபெற்றார்.அதைத் தொடர்ந்து புதிய உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை முதன்மைச் செயலாளராக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றிய எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்படுகிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.புதிய உள்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் எஸ்.கே.பிரபாகர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். டெல்லி ஐ.ஐ.டி. யில் எம்.டெக். படித்துள்ளார். நிதி நிர்வாகத்தில் எம்.பி.ஏ., பொருளாதாரத்தில் எம்.ஏ., அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டங்களை பெற்றுள்ளார். அவர் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளை கற்றுள்ளார்.கடந்த 1989-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார். தமிழக அரசில் பொதுப்பணித்துறை உள்ளிட்ட மிக முக்கியமான துறைகளின் செயலாளராக எஸ்.கே.பிரபாகர் பணியாற்றி இருக்கிறார்.தலைமைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து உள்துறை முதன்மைச் செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நேற்று மாலை 4 மணியளவில் பதவி ஏற்றுக்கொண்டார். அவரிடம் பொறுப்புகளை நிரஞ்சன் மார்டி ஒப்படைத்தார்.புதிய உள்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகரை, டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட உயர் அதிகாரிகள் பலர் வந்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.