ஹைதராபாத்தில் அதிவேகமாக சென்று பாலத்தில் இருந்து பறந்து விழுந்த காரின் சிசிடிவி விடியோக் காட்சி வைரலாகப் பரவி வருகிறது.
ஹைதாராபத்தின் கச்சிபௌலி எனுமிடத்தில் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட பையோடைவர்ஸிட்டி ஜங்ஷன் பாலத்தில் இருந்து கார் ஒன்று விழுந்து சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.
இதில் சாலையோரத்தில் ஆட்டோவுக்காக காத்திருந்த மணிகொண்டா பகுதியைச் சேர்ந்த சத்தியம்மா எனும் பெண் உயிரிழந்தார். ஓட்டுநர் உட்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஹைதராபாத் மேயர் பொந்து ராம்மோகன் அறிவித்துள்ளார்.
பாலத்தின் மீது 40 கி.மீ. வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என்ற விதியை மீறி 99 முதல் 104 கி.மீ. வேகத்தில் காரை ஓட்டியதில் வளைவுப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்ததுதான் விபத்தின் காரணம் என சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜ்ஜன்குமார் தெரிவித்தார்.