Type Here to Get Search Results !

ஏழுமலையான் கோயிலில் இன்றுமுதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: பேப்பர் பெட்டி, சணல் பைகளில் லட்டு பிரசாதம்


திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தினமும் 70 ஆயிரம் முதல் 1லட்சம் பக்தர்கள் வரை வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் லட்டு பிரசாதம் வாங்கிச்செல்கின்றனர். அதன்படி ஒவ்வொரு பக்தரும் சுமார் 4 முதல் 10 லட்டுகள் வரை பெற்றுச்செல்கின்றனர். லட்டுகளை பக்தர்கள் கொண்டு செல்ல இதுவரை 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் கவர்கள் தேவஸ்தானம் சார்பில் 3 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமையான இன்று முதல் லட்டு பிரசாதங்களை பேப்பர் பெட்டி மற்றும் சணல் பைகளில் பக்தர்கள் கொண்டு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது.
இதற்காக ஒரு லட்டு வைக்கும் விதமான அட்டைப்பெட்டி 3 ரூபாய், 2 லட்டுகள் வைக்கும் அட்டைப்பெட்டி 5 ரூபாய், 4 லட்டுகள் வைக்கும் அட்டைப்பெட்டி 10 ரூபாய் என தேவஸ்தானம் விலையை நிர்ணயித்து விற்பனை செய்கிறது.
அதேபோல் 5 லட்டுகள் வைக்கும் சணல் பை ₹25, 10 லட்டுகள் வைக்கும் சணல் பை ₹30, 15 லட்டுகளுக்கு ₹35, 25 லட்டுகளுக்கு ₹55 என்ற விலையில் சணல் பை விற்பனை செய்கிறது. லட்டு பிரசாதம் பெறும் பக்தர்கள் பேப்பர் பெட்டி அல்லது சணல் பைகளில் மட்டுமே லட்டுகளை கொண்டு செல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே பக்தர்கள் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதை தவிர்த்து சணல் அல்லது பேப்பர் பைகளை பயன்படுத்த வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Top Post Ad

Below Post Ad