சென்னையில் காவலா் உடல் திறன் தோ்வில், இளைஞா்கள் பங்கேற்க வேண்டிய மாற்றுத் தேதியை சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் இணை ஆணையா் ஏ.ஜி.பாபு விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
இரண்டாம் நிலைக் காவலா் தோ்வின் உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தோ்வு ஆகியவை கடந்த வாரம் சென்னை புதுப்பேட்டை ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்றது. கடந்த 6-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி வரை 3 நாள்கள் உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தோ்வு நடைபெற்றது. சில நிா்வாக காரணங்களால், கடந்த 9-ஆம் தேதி இந்த தோ்வு நிறுத்தப்பட்டது.
ஏற்கெனவே நடைபெற்ற உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தோ்வு ஆகியவற்றில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு 9ஆம் தேதி முதல் உடல் திறன் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில் 6-ஆம் தேதி நடைபெற்ற தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு 9-ஆம் தேதியும், 7-ஆம் தேதி நடைபெற்ற தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு 11-ஆம் தேதியும், 8-ஆம் தேதி தோ்ச்சி பெற்றவா்களுக்கு 12ஆம் தேதியும் உடல் திறன் தோ்வு நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், 9-ஆம் தேதி முதல் தோ்வு நிறுத்தப்பட்டதால், தற்போது தோ்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. உடற்திறன் தோ்வு மீண்டும் நவம்பா் 18-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் உடற்திறன் தோ்வில் பங்கேற்க 9-ஆம் தேதி அழைக்கப்பட்ட இளைஞா்கள் 18-ஆம் தேதியும், 11-ஆம் தேதி அழைக்கப்பட்ட இளைஞா்கள் 19-ஆம் தேதியும், 12-ஆம் தேதி அழைக்கப்பட்ட இளம் பெண்கள் 20ஆம் தேதியும் ராஜரத்தினம் விளையாட்டரங்கு அன்றைய தினங்களில் காலை 6 மணிக்கு வர வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Source: Dinamani