சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை செலுத்துவதற்காக, இனி நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மின்னணு முறைப்படி எளிதாகவும், விரைவாகவும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறையை வரும் டிசம்பர் மாதம் நாடு முழுவதும் அமல்படுத்துகிறது மத்திய அரசு. வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 'பாஸ்டேக்' (FASTAG) என்கிற சுங்கக்கட்டணம் வசூளிக்கும் புதிய முறை இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், சுங்கக்கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதோடு, சரக்கு வாகனங்களின் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்கவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ”பாஸ்டாக்” (FASTAG) எனப்படும் மின்னணு முறையில் கட்டணம் வசூளிக்கும் வழிமுறையை அறிமுகப்படுத்துகிறது. ”பாஸ்டேக் முறைப்படி கட்டணத்தை செலுத்துவது எப்படி? என்று நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
➤ முதலில், Axis Bank, State Bank of India, ICICI Bank, IDFC Bank உள்ளிட்ட 22 அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில், மின்னணு முறைப்படி சுங்கக்கட்டணத்தை செலுத்த தேவையான “பாஸ்டேக” என்கிற அட்டையை விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். முதல் முறை பாஸ்டேக்கை பெறுபவர்கள், இணைப்பு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். அதோடு, வாகனங்களுக்கான வைப்புத் தொகையாக ரூ.200 செலுத்த வேண்டும், இத்தொகை குறிப்பிட்ட வாகனத்தின் அளவிற்கு ஏற்றது போல் ரூ.400 வரை உயரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
➤ இவற்றோடு, குறைந்தபட்ச இருப்புத்தொகையாக 100 ரூபாயை பாஸ்டேக் அட்டையில் எப்போதுமே வைத்திருக்க வேண்டும். இந்த பாஸ்டேக் அட்டையை, வாகனத்தின் முன் பக்க கண்ணாடியில் பொருத்த வேண்டும். பாஸ்டேக் அட்டைகள் பொருத்தப்பட்ட வாகனக்கள் சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் போது, ரேடியோ அதிர்வலைகள் மூலம் பாஸ்டேக் ஸ்கேன் செய்யப்படும். இதன் மூலம் நாம் சுங்கக்கட்டணமாக செலுத்த வேண்டிய தொகை நம்முடைய பாஸ்டேக் அட்டையில் இருந்து கழித்துக்கொள்ளப்படும்.
➤செலுத்திய கட்டணம் குறித்த SMS தகவல் நம் செல்போன் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும். பாஸ்டேக்கை வங்கிக் கணக்கோடும் இணைத்துக்கொள்ளலாம் அல்லது ப்ரீப்பெய்ட் வாலட் முறை மூலமாகவும் கார்டில் உள்ள பணம் குறையும் போது ரீச்சார்ஜ் செய்துக்கொள்ளலாம்.
➤ ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்தனி டேக் வாங்கப்பட வேண்டும், ஒரே பாஸ்டேக்கை பல வாகனங்களுக்கு பயன்படுத்த இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் பாஸ்டேக்கை பெறாதவர்களுக்கு, சுங்கச்சாவடிகளில் கட்டணம் இரட்டிப்பாக்கப்படும் என்றும் மத்திய அரசு வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பாஸ்டேக் அட்டை வாங்குவதை ஊக்குவிக்கும் விதமாக, டிசம்பர் 1 ஆம் தேதி வரை பாஸ்டேக்கை இலவசமாக சுங்கச்சாவடிகளிலேலே பெற்றுக் கொள்ளலாம் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பாஸ்டேக் முறையை சரியான முறையில் அமல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேகமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக, சுங்கச்சாவடிகளுக்கு, சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்களையும் பணியமர்த்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளன.