தமிழகத்தில் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கும், ராமநாதபுரம், திருநெல்வேலி தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட வானிலை தகவலில், கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு திருவண்ணாமலை, கடலூர் விழுப்புரம், தேனி, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறில் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தஞ்சை மாவட்டம் மஞ்சளாறு பகுதியில் 9 செ.மீ மழையும், நாகையில் 8 செ.மீ மழையும், சோழிங்கநல்லூர், சிதம்பரம், மரக்காணம், பாளையங்கோட்டை பகுதிகளில் 5 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.