பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதை அறியாமல் 46 ஆயிரம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருந்த மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த 82 வயதான தங்கம்மாளும்,77 வயதான அவரது சகோதரி ரங்கம்மாளும் மதிப்புழப்பு செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளாக 46 ஆயிரம் ரூபாயை சேமித்து வைத்திருந்தனர்.
மருத்துவ செலவுக்காகவும், கடைசி கையிருப்பாக அதை வைத்திருந்தனர். இந்த தகவல் வெளியானதை அடுத்து. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
பல்லடம் தாசில்தார் சிவசுப்பிரமணியம் மேற்பார்வையில் அதிகாரிகள் 2 மூதாட்டிகளிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து வருவாய் அதிகாரிகள் சகோதரிகளின் இருவருக்கும் முதியோர் உதவி தொகை மற்றும் சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.