பாகிஸ்தானில் டெங்கு காய்ச்சல் வரலாறு காணாத வகையில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு வருடத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது. அந்த வகையில் நடப்பாண்டில் மட்டும் பாகிஸ்தானில் 49 ஆயிரத்து 587 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேசிய சுகாதார சேவைகள் அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஷாஜித் ஷா கூறியதாவது:- பாகிஸ்தானில் கடந்த 2011-ம் ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. சுமார் 27,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகப்படியான டெங்கு காய்ச்சல் பரவலை பாகிஸ்தான் தற்போது எதிர் கொண்டுள்ளது. அதே சமயம் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. 2011-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 370 பேர் உயிரிழந்தனர். ஆனால் நடப்பாண்டில் இதுவரை 79 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். டெங்குவை கட்டுப்படுத்த பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Source : Maalaimalar