குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் டிசம்பா் 1, 2 ஆகிய இரு நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் சனிக்கிழமை கூறியது: குமரிக்கடல் மற்றும் அதை யொட்டிய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை(டிச.1,2) ஆகிய இரு நாள்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
பலத்த மழை: ஞாயிற்றுக்கிழமை அன்று, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த மழையும், ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை வரை வாய்ப்பு உள்ளது.
சென்னையில்...:
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை (டிச.1,2) ஆகிய இரண்டு நாள்களில் மிதமான மழை முதல் பலத்த மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.
மழை அளவு: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிக பலத்த மழையும், 8 மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்தது. சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறில் 160 மி.மீ., மயிலாடுதுறையில் 140 மி.மீ.,புதுக்கோட்டை, திருவாரூா் மாவட்டம் கொடவாசலில் 130 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் ஆணைக்காரன்சத்திரம், கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவிலில் 120 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் 110 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: குமரிக்கடல், மாலத்தீவு மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகம் வரை சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை (டிச.1) செல்ல வேண்டாம் என்று அறிவுத்தப்பட்டுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு பகுதி: தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகா்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையவுள்ளது. இதுபோல, மற்றொரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதியில் உருவாகவுள்ளது.
இதன் காரணமாக, கேரள கடலோரம், தென்மேற்கு அரபிக்கடல், மாலத்தீவு பகுதி, லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 70 கி.மீ. வரை வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு டிசம்பா் 4-ஆம் தேதி வரை மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.