மத்திய, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் டிசம்பர்-1 முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் பணமில்லாமல் கட்டணம் செலுத்தும் ‘ஃபாஸ்டேக் ’ (FASTag) எனும்‘செயலி’
முறையை அமல்படுத்துகிறது. ‘ஃபாஸ்டேக் ’ (FASTag) எனும் முறை குறித்து வாகன ஓட்டுனர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் ஏராளமாக உள்ளது.
‘ஃபாஸ்டேக் ’ (FASTag) என்றால் என்ன? அதற்கு முன் சுங்கச்சாவடியில் உங்கள் வாகனம் எப்படி கடக்கிறது என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும். வரிசையாக செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு டிக்கெட் வழங்கப்படும். திரும்பவும் வரும் போது கட்டணம் செலுத்தாமல் சேர்த்து கட்டும் முறையும் உள்ளது.
தற்போதுள்ள முறையில் இவை அனைத்தும் கிடையாது. பணமில்லா முறையில் செயலியில் ‘ஃபாஸ்டேக் ’ (FASTag) ஸ்டிக்கர் மூலம் ஒவ்வொரு முறை சுங்கச்சவடியை உங்கள் வாகனம் கடக்கும் போதும் தானாக சுங்கக்கட்டணம் கழிக்கப்படும். இதற்கு வாகன ஓட்டிகள் செய்ய வேண்டியது செயலியை டவுன்லோடு செய்து அதில் வங்கிக் கணக்கை இணைத்து ரீசார்ஜ் செய்ய வேண்டியது தான்.
ரீசார்ஜில் போஸ்ட் பெய்டு, ப்ரீபெய்டு என இரண்டு வகை உண்டு. இதையடுத்து உங்களுக்கான பார்கோடு அடங்கிய ஸ்டிக்கரைப் பெற்று உங்கள் வாகனத்தின் முன் பக்கக் கண்ணாடியில் ஒட்டி விட வேண்டியது தான்.
இதன் பின்னர் உங்கள் வாகனம் ஒவ்வொரு முறை சுங்கச்சாவடியை கடக்கும் போதும் உங்கள் ஸ்டிக்கரில் அடங்கியுள்ள வாகனத்தின் பதிவெண் மற்ற விபரங்கள் அடங்கிய பார்கோடு சுங்கச்சாவடியில் உள்ள ஆண்டெனாவால் டிகோட் செய்யப்பட்டு, ‘ஃபாஸ்டேக் ’ (FASTag)கணக்கிலிருந்து கட்டணத் தொகை வரவு வைத்துக் கொள்ளப்படும். இதற்கு ஏற்ப, வாகன ஓட்டிகள், ‘ஃபாஸ்டேக் ’ (FASTag) அக்கவுண்ட்டை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
தேசிய மின்னணு கட்டண வசூல் (NETC) திட்டத்தின் கீழ், ‘ஃபாஸ்டேக் ’ (FASTag) வழியாக மட்டுமே இனி சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டிச. 1-க்குப் பிறகு செயலியை பதிவிறக்கம் செய்யாமல் ‘ஃபாஸ்டேக் ’ (FASTag) ஸ்டிக்கர் இல்லாமல் சுங்கச் சாவடியை கடக்கும் வாகன ஓட்டிகள் ரொக்கம், அல்லது டெபிட்,கிரெடிட் கார்டு மூலமாகப் பணம் செலுத்துவதாக இருந்தால், கட்டணத் தொகை இரட்டிப்பாக வசூலிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வாகனங்களின் சீரான ஓட்டத்தை உறுதி செய்யவும், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பதும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதும் நோக்கமாக இருப்பதால், சுங்கச் சாவடிகளில் உள்ள அனைத்துப் பாதைகளிலும், ‘ஃபாஸ்டேக் ’ (FASTag) வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
இனி சுங்கச் சாவடிகளில் அனைத்து வழிகளும் ‘ஃபாஸ்டேக் ’ (FASTag) ஒட்டப்பட்ட வாகனங்களுக்கான வழியாக இருக்கும். ஒரே ஒரு வழி மட்டும், பிற வகையில் கட்டணம் செலுத்துவோருக்காக ஒதுக்கப்படும்.
ரேடியோ-அதிர்வெண் அடையாளத்தை (RFID) பயன்படுத்தி ‘ஃபாஸ்டேக் ’ (FASTag)செயல்படுறது. இது தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் வாகனம் கடந்து செல்லும் போது, அதற்கான, கட்டணத்தை தானாக கழித்துக் கொள்கிறது. உங்களது ‘ஃபாஸ்டேக் ’ (FASTag) செயலி கணக்கு உங்கள் வங்கிக்கணக்கு அல்லது கட்டணம் செலுத்தி ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் முறை என இரண்டு வகை உண்டு. ப்ரீபெய்ட் கணக்காக இருந்தால் பயன்பாட்டிற்கு ஏற்ப அதை முன்கூட்டியே, ரீசார்ஜ் செய்து வைத்திருக்க வேண்டும்.
புதிய வாகனம் வாங்குவதாக இருந்தால் வாகன ஷோரூமிலேயே ‘ஃபாஸ்டேக் ’ (FASTag) வழங்கப்படும். பழைய வாகனங்களுக்கு, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருக்கும் விற்பனை மையத்தில் வாங்கலாம் அல்லது தேசிய நெடுஞ்சாலைத்துறையுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கியில் கணக்கு வைத்திருந்தால் அதன்மூலமும் ‘ஃபாஸ்டேக் ’ (FASTag)பெறலாம்.
தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கிகள், பெட்ரோல் பங்குகள், Paytm, அமேசான் மூலமாகவும் ‘ஃபாஸ்டேக் ’ (FASTag) -ஐ வாங்கலாம். இதற்காக ஒருமுறை இணைப்புக் கட்டணமாக ரூ.200 கட்ட வேண்டும்.
சுங்கச்சாவடிகளில் ‘ஃபாஸ்டேக் ’ (FASTag)ஐப் பயன்படுத்துவதன் மூலம், சுங்கக் கட்டணத்தில் குறிப்பிட்ட சதவீதம் பணம் திரும்பப் பெறும் வசதியும் உண்டு.
‘ஃபாஸ்டேக் ’ (FASTag) பயன்படுத்தப்படுவதன்மூலம் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரசீதுகளை வழங்க சுங்கச்சவடியில் தேவையில்லை என்பதாலும், சுங்கச்சாவடியில் தேவையற்ற வாக்குவாதம், சர்ச்சை உள்ளிட்டவையும் தவிர்க்கப்படும்.
ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரு ‘ஃபாஸ்டேக் ’ (FASTag) கணக்கு துவக்கப்படும். அதை வேறு வாகனத்துக்கு பயன்படுத்த முடியாது. ‘ஃபாஸ்டேக் ’ (FASTag) ஸ்டிக்கரை தொலைந்துப் போனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அணுகி உங்கள் ‘ஃபாஸ்டேக் ’ (FASTag) எண்ணை தெரிவித்துப் பெறலாம்.
‘ஃபாஸ்டேக் ’ (FASTag) வாங்க வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (ஆர்.சி புத்தகம்), வாகன உரிமையாளரின் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஏதாவது ஒரு ஆவணம் (ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை). இதில் தனியார் வாகனம்(private vehicle), பொதுப்பயன்பாட்டில் உள்ள வாகனம் (public vehicle) இரண்டுக்குமான கட்டணம், ஆவணங்கள் அளிப்பது வேறுபடலாம்.
ப்ரிபெய்டு முறையில் ‘ஃபாஸ்டேக் ’ (FASTag)-ஐ ரீசார்ஜ் செய்ய நெடுஞ்சாலைத்துறை மேலாண்மை நிறுவனம் உருவாக்கியுள்ள My FASTag செயலியை தரவிறக்கம் செய்து அதன்மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
இந்த புதிய முறை நடைமுறைக்கு வரும் போது நடைமுறைச் சிக்கல்கள் பல வரலாம். பார்கோடை சரியாக ஆண்டெனா ரிசீவ் செய்யாவிட்டால் வாகனம் கடக்க முடியுமா?, ப்ரீபெய்டு முறை வாகன ஓட்டிகள் ரீசார்ஜ் செய்ய மறந்தால் எழும் சிக்கல், எப்போதோ ஒருமுறை நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டி அதற்காக ‘ஃபாஸ்டேக் ’ (FASTag) செயலியை டவுன்லோடு செய்து வங்கிக் கணக்கை இணைத்து வைக்க வேண்டுமா? அரசுப் பேருந்துகள் ஆயிரக்கணக்கில் தினமும் பயணம் செய்கின்றன.
இவைகள் அனைத்துக்கும் இணைப்புக் கட்டணம் ஒரு வாகனத்துக்கு ரூ.200 கட்ட வேண்டுமென்றால் அதுவே பெரிய தொகையாகக் கூடுதல் செலவாகும். சுங்கச்சாவடி அருகில் குடியிருப்பவர்கள் முன்னர் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் ஒரு உடன்பாடு அடிப்படையில் கட்டணம் இல்லாமல் கடப்பார்கள் அவர்கள் நிலை என்ன, சிறிய வாகனங்களுக்கு என்ன என்பது குறித்தெல்லாம் நடைமுறையில் அமலாகும் போது தான் தெரிய வரும்.
இனி சுங்கச் சாவடிகளில் அரசியல்வாதிகள், சுங்கச்சாவடி ஊழியர்கள் மோதல் இருக்காது, செயலி மூலம் பணம் கட்ட வேண்டும் என்பதால் கட்டாயம் கட்டியே ஆகவேண்டிய நிலை ஏற்படும். அதே நேரத்தில் செயலி இல்லாமல் கடப்பவர்கள் இரட்டிப்புக் கட்டணம் கட்ட வேண்டும் என சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறும் போது அங்கு சண்டை, சச்சரவுக்கு வாய்ப்புள்ளது.