சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும், பாஸ்டேக் திட்டம் அமல்படுத்துவதை, டிச., 15ம் தேதி வரை, மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.நாடு முழுவதும், தேசிய நெடுஞ்சாலைகளில், மத்திய அரசு சார்பில், 522 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில், 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றை, தினமும், சராசரியாக, ஒரு கோடியே, 40 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன. இதனால், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், டிசம்பர், 1ம் தேதி முதல், பாஸ்டேக் எனப்படும், மின்னணு முறையில் சுங்கக்கட்டணம் செலுத்தும் திட்டம் அமல்படுத்தப்படும் என, மத்திய அரசு தெரிவித்திருந்தது.இந்நிலையில், பாஸ்டேக் அமல், டிச., 15 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.