பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்தை கருத்தில் கொண்டு மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்வேறு ஏழை எளிய குழந்தைகள் பலன் பெறுகின்றனர். ஆனால் இந்த திட்டத்திற்காக அரசு வழங்கும் உணவுப்பொருட்கள் மற்ற இடங்களில் விற்கப்பட்டு பள்ளிக்குழந்தைகள் வஞ்சிக்கப்படும் அவலங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.உத்தரபிரதேச மாநிலத்தின் சொன்பத்ரா மாவட்டத்தில் சலாய் பன்வா ஆரம்ப தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசுப் பள்ளியான இங்கு மதிய உணவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கு பால் வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு வாளி தண்ணீரில் வெறும் 1 லிட்டர் பாலை ஊற்றி கலந்து, 81 குழந்தைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. சமையல்காரர் தண்ணீரில் பாலை கலக்கும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து துறை சார்ந்த அதிகாரிகள் அப்பள்ளியின் மீதும் சமையல்காரார் மீதும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குழந்தைகளுக்கு அளிக்கும் பாலில் அதிக அளவு தண்ணீரை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.