இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் 2018 - 2019ம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்து வரும் குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளில் உள்ள 25 சதவிகித இடங்களில் ஏழை குழந்தைகள் இலவசமாக சேர்க்கப்படுவர். இந்த திட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் தகுதியான மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த தேவையில்லை. அவர்களுக்கான கல்வி கட்டணம் மத்திய, மாநில அரசுகள் சார்பில் இணைந்து செலுத்தப்படும். இந்நிலையில் கடந்த 2018 - 2019ம் கல்வி ஆண்டில் இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த 64 ஆயிரத்து 385 பேருக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ள தமிழக அரசு அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.
அதில் எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வி கட்டணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதையடுத்து நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விரைவில் கல்விக்கட்டண பாக்கி தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார். 2013 முதல் 2018 வரை இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் கல்வி பயின்ற 4 லட்சத்து 83 ஆயிரத்து 902 பேருக்கு தமிழக அரசு சார்பில் இதுவரை 644 கோடி ரூபாய் கல்வி கட்டணமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.