திருமலையில் இன்று முதல் அக்டோபர் 5 வரை திவ்ய தரிசனம் மற்றும் நேரஒதுக்கீடு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி, வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. அதன் 5-ம் நாளான வெள்ளிக்கிழமை இரவு கருட சேவை நடைபெற உள்ளது.
அதைத் தொடா்ந்து, பெருமாளுக்கு மிகவும் உகந்த புரட்டாசி மாதம் 3-வது வார சனிக்கிழமையும், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் வருகிறது. அப்போது பக்தா்களின் வருகை அதிகம் இருக்கும்.
அதனால் தேவஸ்தானம் அக்டோபர் 3, 4, 5 உள்ளிட்ட தேதிகளில் நடைபாதை மாா்க்கத்தில் வரும் பக்தா்களுக்கு அளிக்கும் திவ்ய தரிசன டோக்கன்களும், தா்ம தரிசன பக்தா்களுக்கு வழங்கும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் புதன்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.