Type Here to Get Search Results !

ரகசியக் கேமரா இருப்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? எச்சரிக்கை பதிவு



மதுரையை அடுத்த சதுரகிரிமலை கோவில் தங்கும் விடுதியில் பெண் அதிகாரி குளிப்பதை பென்-கேமராவில் படம் பிடித்த இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன் கைது செய்யப்பட்டது பழைய செய்திதான். பலரும் அறிந்திருப்பார்கள்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்டியாகோவில் இருந்து டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகருக்கு சென்ற விமானத்தில் பயணம் செய்த, மலேசியாவை சேர்ந்த சூன் பிங் லீ என்ற வாலிபர் கழிவறையில் ரகசிய கேமராவை பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

கேரளாவில் பக்கத்து வீட்டு குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தி பெண்களின் குளியல் காட்சிகளை தன் வீட்டு கம்ப்யூட்டருடன் இணைத்து கண்டு களித்த எலெக்டிரிஷியன் ரகுநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் ஒரு உணவு விடுதியின் கழிவறைக்கு சென்ற பெண், அங்கு ஒரு செல்பேசி மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அண்மை நாட்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. கழிவறை, ஓய்வு அறை, உடை மாற்றும் அறை, ஹோட்டல்களில் என பல்வேறு இடங்களிலும், கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டது கண்டறியப்பட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2015ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஆயத்த ஆடைகள் விற்பனைக் கூடத்தின் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததாக புகாரளித்தார். இதுபோன்ற சம்பவங்கள் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ஆனால், பொதுக் கழிவறை, உடை மாற்றும் அறை, ஹோட்டல் போன்ற இடங்களுக்கு செல்வதை முற்றிலுமாக தவிர்க்க முடியாது. ஆனால் கேமராவில் பதிவாகாமல் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

கேமராக்கள் எங்கெல்லாம் மறைத்து வைக்கப்படும்?

ரகசியமாக மறைத்து வைக்கப்படும் கேமராக்கள் அளவில் மிகவும் சிறியவையாக இருக்கும். ஆனால் அதில் அனைத்து செயல்பாடுகளும் தெளிவாக பதிவாகும். கழிவறை, கடைகளில் ஆடை மாற்றும் அறை, ஹோட்டலில் துணையுடன் தங்கியிருக்கும்போது என எல்லா இடங்களிமே செய்யப்படும் எல்லா செயல்களுமே அந்த கேமராவில் பதிவாகும்.

கேமராக்கள் ரகசியமாக வைக்கப்படும் இடங்கள்:

கேமரா இருப்பதை எப்படி கண்டறிவது?

கவனமாக இருக்க வேண்டியதுதான் அடிப்படையான விஷயம் என சைபர் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொது கழிப்பறையை பயன்படுத்தினாலும், துணி வாங்கும்போது, அங்கு அதை போட்டுப்பார்க்க உடை மாற்றும் அறைக்கு சென்றாலும், ஹோட்டலின் எந்த அறைக்கு சென்றாலும் கவனமாக இருப்பது அவசியம்.

அங்குள்ள பொருட்களை ஆராயவேண்டும். அறையின் மேற்கூரையின் மூலைகளில் ஏதாவது பொருட்கள் இருக்கிறதா என்பதை கவனிக்கவும்.

துளை ஏதேனும் உள்ளதா என்று கவனிக்கவும். துளை இருந்தால், அதனுள்ளே ஏதாவது வைக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும்.

பொதுவாக, இதுபோன்ற கேமராக்கள் ரகசியமாக வைக்க தேர்ந்தெடுக்கப்படுவது, கண்ணாடியின் பின்புறம், புகைப்பட சட்டங்கள் கதவின் பின்புறம் என யாருக்கும் சந்தேகம் வராத இடங்களில் தான். எனவே இதுபோன்ற இடங்களை சோதனை செய்வது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும்.

தேவையில்லாமல் கம்பியோ, ஒயரோ எங்காவது இருக்கிறதா என்றும் பார்க்கவேண்டும். அப்படி ஏதாவது கம்பியோ ஒயரோ இருந்தால், அது எங்கே போகிறது என்பதை கண்டுபிடிக்கவும். இது கேமரா இருக்கும் இடத்தை காட்டிக் கொடுக்கலாம்.

ஒயர் இல்லாத கேமராக்களும் உள்ளன. அவை பேட்டரியால் இயக்கப்படுபவை. காந்தத்தின் உதவியால் இந்த கேமராக்கள் குறிப்பிட்ட இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும்.

மின்சார விளக்கை அணைத்து பார்க்கவும். ஆடை மாற்றும் அறையில் அல்லது ஹோட்டல் அறைக்கு செல்லும்போது, உள்ளே சென்றதுமே விளக்குகளை அணைத்துவிட்டு அறையை நன்றாக சுற்றி பார்க்கவும்.

எல்.ஈ.டி. விளக்கு ஒளி இருப்பது தெரிந்தால், அது கேமராவாக இருக்கலாம். இருளிலும் செயல்பாடுகளை பதிவு செய்யும் கேமராக்களும் உள்ளன.

இந்த கேமராக்களுக்குள் எல்.ஈ.டி. விளக்கு பொருத்தப்பட்டிருக்கும். அது இருளில் ஒளிரும் என்பதால் விளக்கை அணைத்துவிட்டு பார்ப்பதால் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தால் அதை அறிந்துக் கொள்ளலாம்.

கண்ணாடி பரிசோதனை: உடை மாற்றும் அறைகள், குளியலறை, கேமரா என எல்லா இடங்களிலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். நீங்கள் துணிகளை மாற்றுவதற்கு முன்னர், கழிப்பறையை பயன்படுத்துவதற்கு முன்னர் அங்கிருக்கும் கண்ணாடியை பரிசோதனை செய்யவேண்டும்.

கண்ணாடியின் பின்புறத்தில் கேமரா ரகசியமாக பொருத்தப்பட்டிருக்கலாம். ஹோட்டல் அறைகளில் மிகப் பெரிய கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். அதன் மறுபுறம் இருப்பவர்களுக்கு இந்தப் புறம் நடைபெறும் அனைத்தும் நன்றாக தெரியலாம். எனவே கண்ணாடியை கவனமாக பரிசோதனை செய்து பார்ப்பது அவசியம். கண்ணாடியின் மீது ஒரு விரலை வைத்து பரிசோதிக்கவும்.

கண்ணாடி மீது வைக்கும் உங்கள் விரலுக்கும், கண்ணாடியில் தோன்றும் உங்கள் உருவத்திற்கும் இடையே சிறிது இடைவெளி இருந்தால், கண்ணாடி, சாதாரண கண்ணாடி என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆனால் உங்கள் விரலுக்கும், கண்ணாடியில் தோன்றும் உங்கள் உருவத்திற்கும் இடையே இடைவெளியே இல்லை என்றால் பிரச்சனை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளவும்.

உடனே மின்விளக்கை அணைத்து விட்டு, செல்பேசியின் ப்ளாஷை ஆன் செய்து, நான்கு பக்கமும் கவனமாக பார்க்கவும்.

அப்போது ஏதாவது ஓரிடத்தில் இருந்து பிரதிபலிப்பு தோன்றினால், அது கேமராவில் பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடியில் இருந்து வருகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

செயலி (App) மூலம் கண்டறிவது: ரகசிய கேமராக்களை கண்டறிவதற்கான பல செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், அந்த செயலிகளும் போலியானவையாக இருக்கலாம் என்று சைபர் பிரிவு வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கேமரா எதுவும் இல்லை என்று அந்த செயலிகள் சொல்வதை கண்டு நீங்கள் நிம்மதியாக இருந்தால், உங்கள் அந்தரங்கம் பறிபோகலாம். அதுமட்டுமல்ல, உங்கள் செல்பேசியில் வைரஸையும் ஏற்படுத்தலாம்.

கேமரா இருப்பதை அறியும் டிடெக்டர்களும் கிடைக்கின்றன, அவற்றை பயன்படுத்தலாம். ஆனால் விலை உயர்ந்த இந்த டிடெக்டர்கள், பொதுவாக போலீஸாரிடம்தான் இருக்கும்.

கேமரா இருப்பதை கண்டறிந்தால் என்ன செய்ய வேண்டும்?

கேமரா மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தால் அச்சப்பட வேண்டாம். உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொள்ளவும். கேமராவை தொட வேண்டாம். ஏனெனில் அதில் பதிந்திருக்கும் குற்றவாளியின் கைரேகையை, உங்கள் கைரேகை அழித்துவிடும். போலீஸ் வரும்வரை அந்த இடத்திலேயே இருக்கவும்.

சைபர் நிபுணர் கர்ணிகா இவ்வாறு கூறுகிறார்: "ஒரு பெண்ணின் சம்மதமின்றி கேமராவில் அவரை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதும், அதை வேறு ஒருவருடன் பகிர்வதும் குற்றம். அதை செய்பவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம், பிரிவு 67A மற்றும் 66E (தனியுரிமை மீறல்) மற்றும் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 354Cயின்படி, வழக்கு பதிவு செய்யலாம். குற்றம் நிரூபிக்கப்பக்கப்பட்டால் மூன்றாண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்."

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, 2016இல் பதினோராயிரம் பேர் சைபர் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கு மேற்பட்டவர்கள், இது போன்ற ரகசிய கேமராக்களால் வீடியோ தயாரித்ததற்காக கைது செய்யப்பட்டனர்.

காணொளிகளை என்ன செய்வார்கள்?

"தாங்கள் பார்ப்பதற்காக சிலர் இதுபோன்ற காணொளிகளை தயாரித்தால், வேறு சிலரோ விற்பனை செய்யும் நோக்கில் காணொளிகளை தயாரிக்கிறார்கள். பணம் கொடுத்து பெறப்படும் இந்த காணொளிகள் வாட்ஸ்-ஆப் போன்ற சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன."

"பல சந்தர்ப்பங்களில் பாதிப்புக்கு ஆளான பெண்கள் புகார் கொடுப்பதில்லை. வெளியே சொன்னால் அவமானம் என்று அமைதியாக இருந்துவிடுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் பெண்களின் மனதை பாதித்து தற்கொலைக்கும் தூண்டுகின்றன. ஆனால் இது போன்ற விவகாரங்களுக்காக அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. போலீஸாரை தொடர்பு கொண்டு அவர்களின் உதவியைப் பெறலாம்."

"இந்திய அரசின் cybercrime.gov.in என்ற வலைத்தளத்தில் குழந்தைகள் தொடர்பான விவகாரங்கள் குறித்து பதிவு செய்யப்படுகிறது.

விரைவில் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளையும் பதியும் வகையில் இந்த வலைதளம் மேம்படுத்தப்படவிருக்கிறது. மகளிர் ஆணையத்தின் சைபர் செல்லில் பெண்கள் புகாரளிக்கலாம். இதைத்தவிர, பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்தின் சைபர் செல்லிலும் புகார் அளிக்கலாம்."

ரகசிய கேமராக்களில் இருந்து பாதுகாக்க சைபர் நிபுணர்கள் பல உக்திகளை கூறினாலும், அதிக எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருப்பதுதான் அனைவருக்கும் நல்லது.

Top Post Ad

Below Post Ad