பொதுவாக பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, ஏதாவது ஒரு கருத்தை சிறியவர்கள் பேசினால், ""ஏய் சும்மா இருக்க மாட்டே. முளைச்சு மூணு இலை விடல அதுக்குள்ள என்ன பேச்சு?''ன்னு சொல்லி வாயை அடைக்கும் பெரியவர்களைப் பார்த்திருப்போம்.
ஆனால், தனது சிறுவயது பிள்ளை சொல்லும் போது அவனது வாயை அடைக்காமல் அவன் கேட்ட விஷயங்களை செய்து கொடுத்ததால், இன்று அந்தச் சிறுவன் யூபிஎஸ்சி தேர்வு தொடர்பான பயிற்சியை வழங்குபவனாக உய்ர்நதுள்ளான். இத்தனைக்கும் அவனது வயது வெறும் 13 தான்...
தெலங்கானா மாநிலம், மான்சேரியல் என்ற ஊரில் பிறந்த அமர் சாத்விக் தொகிட்டிதான் அந்த பெருமைக்குச் சொந்தக்காரச் சிறுவன்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினமானதாகும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பட்டதாரிகளும், முதுகலைப் பட்டதாரிகளும் இந்த தேர்வில் கலந்து கொண்டாலும் சிலர் மட்டுமே வெற்றி பெற்று வருகின்றனர். பலர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தகைய தேர்வுகளை எதிர்கொள்ள தேவையான விஷயங்கள் குறித்து கற்றுத் தர நாடு முழுவதும் ஏராளமான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அத்தகைய மையங்களை நன்கு படித்த அனுபவமிக்கவர்கள் நடத்தி வருகின்றனர். வித்தியாசமாக, 13 வயதான அமர் சாத்விக் தொகிடியும் அத்தகைய பயிற்சி மையத்தினை நடத்தி வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனாலும், நம்பித்தான் ஆக வேண்டும்.
தற்போது 9 -ஆம் வகுப்பு படிக்கும் அமர், பத்து வயதில், 2016-ஆம் ஆண்டு, "லேர்ன் வித் அமர்' என்ற "யூ-டியூப்' சேனலைத் தொடங்கினார். இன்று இவரது சானலில் 2,87,669-க்கும் அதிகமான பின்தொடர்வோர்கள் உள்ளனர்.
அமர் தனது யூ-டியூப் சேனல் வாயிலாக அரசியல் அறிவியல் பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறார். நாடுகளின் பெயர், தலைநகரங்கள், அதன் இருப்பிடம், ஆறுகளின் பெயர் போன்றவற்றை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள பல்வேறு நினைவுக் குறிப்புகளையும், உத்திகளையும் கூறி சுவாரசியமாக அமர் கற்பித்து வருகிறார்.
""ஆசிரியராகப் பணியாற்றி வரும் எனது அப்பாதான் எனது முயற்சிக்கு துணை புரிந்து வருகிறார். நான் 5 ஆம் வகுப்பு படிக்கும் போது அட்லûஸ வைத்துக் கொண்டு பார்ப்பேன். இன்னும் சொல்லப் போனால் அது எனக்கு விளையாடுவது போல் இருந்தது. இதைப் பார்த்த என் அப்பா எனக்கு புவியியல் கற்றுத் தரத் தொடங்கினார். ஒரு முறை நான் அப்பாவிடம் கற்றுக் கொண்டதை விளக்கமாக சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு தெரியாமலேயே என் அம்மா அதை வீடியோவாகப் பதிவு செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்தார். அந்தப் பதிவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்போதிருந்துதான் நான் இந்த முயற்சியில் இறங்கினேன்.
என் தம்பி விக்னேஷும் எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறான். எனது யூ-டியூப் பார்வையாளர்களில் ஏராளமானோர் போட்டித் தேர்வுகள் எழுதுபவர்கள். குறிப்பாக ஐஏஎஸ் தேர்வு எழுதுபவர்களாகத்தான் உள்ளனர். இவர்கள் கேட்கும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் பாடங்களை முறையாகப் படித்து, வீடியோக்களை உருவாக்குகிறேன். ஒரு தலைப்பு குறித்து ஆராய சுமார் இரண்டு வாரங்கள் எடுத்துக்கொள்கிறேன். அதன் பிறகு நான் ஒன்றிரண்டு முறை பயிற்சி எடுத்துக்கொண்ட பிறகே வீடியோவாகப் பதிவிடுகிறேன். நான் பள்ளியில் படித்து வருவதால் வார இறுதியில் மட்டுமே வீடியோக்களைப் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளேன்'' என்று கூறும் அமரின் ஆசை ஐஏஎஸ் அதிகாரியாவதுதான்.