Type Here to Get Search Results !

அமேசான் காட்டு தீயை அணைக்காவிட்டால் உலகமே மிகப்பெரும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்





உலகத்தின் நுரையீரல் என்று அறிவியாலளர்களால் வர்ணிக்கப்படும் அமேசான் மழைக்காடுகள் கடந்த 15 நாட்களாக கடுமையாக பற்றி எரிந்து வருகிறது. இந்த காட்டு தீயை அணைக்காவிட்டால் உலகமே மிகப்பெரும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் 
எச்சரித்துள்ளனர். 

உலகிலேயே மிகப்பெரிய காடுகளில் முதலிடத்தில் இருப்பது அமேசான் மழைக்காடுகள். பிரேசில், பொலிவியா, பெரு, கொலம்பியா, வெனிசுலா, கயானா ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கிடையே பாரபட்சமற்று பரந்து விரிந்து கிடக்கும் மாபெரும் காடுதான் அமேசான். பிரேசிலிலிருந்து பெரூ வரை காட்டை கிடைமட்டமாக கிழித்து கொண்டு செல்லும் 7.5 மில்லியன் கிலோ மீட்டர் நீளம் கொண்ட அமேசான் நதி இங்கேதான் இருக்கிறது. 

தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்துவிட்ட காலத்திலும் மனிதர்களால் முழுவதுமாக நுழைந்து ஆராய முடியாத பகுதி அமேசான் காடுதான்.

3 மில்லியன் வகை பூச்சியினங்கள், தாவரங்கள், விலங்குகள், ஊர்வன, பறவைகள் ஆகியவற்றை தனக்குள் பாதுகாத்து வருகிறது அமேசான் காடு. அதில் பல விலங்கினங்களை மனிதர்கள் இதுவரை பார்த்தது கூட கிடையாது. விலங்குகள் மட்டுமல்ல 10 லட்சம் ஆதிவாசி மக்கள் அமேசான் காடுகளுக்குள் வாழ்ந்து வருகின்றனர். 
 
55 லட்சம் கிலோமீட்டர் கொண்ட அமேசான் காடுதான் உலகம் முழுவதும் மழை பெய்வது, பனி பெய்வது என அனைத்து சீதோஷ்ண நிலைகளும் உருவாக முக்கிய காரணியாக திகழ்கிறது. அமேசான் காடுகளில் உருவாகும் ஆக்ஸிஜன் உலக மனிதர்கள் சுவாசிக்கும் காற்றில் 40 சதவீதம் கல்ந்திருக்கிறது. ஒவ்வொரு முறை நாம் சுவாசிக்கும் காற்றிலும் எங்கோ அமேசான் காட்டில் உள்ள செடி கொடுத்த ஆக்ஸிஜன் இருக்கிறது.

உலகுக்கு உயிர் கொடுத்த அமேசான் இப்போது தன் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. காடுகளில் காட்டுத்தீ ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் அமேசானில் இப்போது உருவாகியிருக்கும் காட்டுத்தீ இயல்பை மீறிய ஒன்று. ஆண்டு தோறும் அமேசான் காட்டில் தீ ஏற்படும். பிறகு தானாகவே அணைந்து விடும். ஆனால் இந்த முறை உருவாகியிருக்கும் தீ இதுவரை அமேசானை எரித்த காட்டுத்தீயை விட 83 மடங்கு பெரியது. கிட்டதட்ட ஒரு தமிழ்நாட்டை விட பெரிய அளவு நிலப்பரப்பு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இது தொடர்ந்து இப்படியே எரிந்து கொண்டிருந்தால் ஏற்படும் புகை மூட்டத்தால் காற்றில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து விடும். மேலும் வெப்பமான புகை காற்றடுக்குகளில் ஏற்படுத்தும் மாற்றத்தால் மழை பொழிவு, பனி பொழிவு ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும். ஒருவேளை அவை நிகழாமலே போகலாம். 
 
ஏற்கனவே உலகெங்கும் பனிக்கட்டிகள் உருகி கடல்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் இந்த வெப்பசலனம் மேலும் அதை அதிகரிக்கும். ஏற்கனவே பல நாடுகளின் நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயத்தில் இருக்கிறது. இந்த காட்டுத்தீ சீக்கிரம் அதை நிகழ்த்தி காட்டிவிடும். இந்த உடனடி இயற்கை மாற்றத்தை தாங்கி கொள்ளும் திறன் மனித சமுதாயத்திற்கு இருக்கிறதா என்பது சந்தேகமே!

அமேசான் காடுகளில் பரவிய தீயின் வெப்பம் தாங்காமல் சுற்றியுள்ள 4 நாடுகளை சேர்ந்த நகர மக்களும் வெளியேறியுள்ளனர். அமேசானஸ், பாரா, மாட்டோ மற்றும் ரொண்டோனாஸ் ஆகிய நகரங்களில் வாழ்ந்த மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஆகஸ்டு 11 முதல் விஸ்வரூபம் எடுத்த அமேசான் காட்டுத்தீ தன்னை சுற்றியுள்ள 9 நாடுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காட்டுக்குள் எண்ணற்ற அபூர்வ விலங்குகள், தாவரங்கள் சாம்பலாகி விட்டன. பிரேசில் நாட்டின் பாதி பகுதி அமேசான் காட்டு புகையால் சூழ்ந்துள்ளது. சான் பௌலோ என்ற நகரம் பக்கத்தில் இருப்பவரே கண்ணுக்கு தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்து இருண்டு போய் கிடக்கிறது. காற்றில் பரவும் இந்த அடர்ப்புகையின் தாக்கத்தை அட்லாண்டிக் கடல் தாண்டி இருக்கும் ஐரோப்பிய தேசம் வரை உணர முடிவதாக ஆய்வாலர்கள் தெரிவித்துள்ளனர். 
 
உலக மக்கள் அனைவரும் இந்த இயற்கை பேரிடரால் அதிர்ச்சியடைந்துள்ளனர். பற்றி எரியும் அமேசானின் வீடியோக்களும், அப்பாவியாய் இறந்து கிடக்கும் உயிரினங்களின் புகைப்படங்களும் பார்ப்போர் மனதை குற்றவுணர்ச்சி அடைய வைக்கின்றன. பலரும் அமேசானுக்காக பிரார்த்திக்கிறார்கள்.

மிகப்பெரும் பொருளாதார பலமற்ற லத்தீன் அமெரிக்க நாடுகள் இந்த பேரிடரை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். ஜி7 எனப்படும் வல்லரசு நாடுகளின் கூட்டமைப்பிடம் உதவி கோரியிருக்கிறார் பிரேசில் அதிபர் ஜேர் பொல்சனாரோ. மேலும் பல நாடுகள் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய முன் வந்திருக்கின்றன. எவ்வளவு பெரிய தொழில்நுட்பங்களை மனிதன் கண்டுபிடித்தாலும் இயற்கைக்கு முன் மனிதன் ஒன்றுமில்லை என்பதே ஒவ்வொரு முறையும் இயற்கை நிரூபித்து கொண்டேதான் இருக்கிறது.

Top Post Ad

Below Post Ad