தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதால், திருமலையில், 'ரெட் அலெர்ட்' பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 22ல், கோயம்புத்துாரில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதியும், இலங்கையைச் சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகளும் ஊடுருவியுள்ளனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் சித்துார் அருகில் உள்ள, காணிப்பாக்கம் விநாயகர் கோவில் மற்றும் திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு, பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாக, மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், திருமலையில் ரெட் அலெர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது, காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அங்கும், திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருமலைக்கு செல்லும் வாகனங்கள், திருப்பதியில் உள்ள அலிபிரி சோதனை சாவடியில், மோப்ப நாய் படை மற்றும் வெடிகுண்டு அகற்றும் படையால் சோதிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.
இது குறித்து, தேவஸ்தான சிறப்பு அதிகாரி, தர்மா ரெட்டி கூறுகையில், ''திருமலைக்கு, கடந்த சில ஆண்டுகளாக, பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய உளவுத் துறை தெரிவித்து வருவதால், இங்கே, 24 மணி நேரமும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன,'' என்றார்.
புத்துாரில் பயங்கரவாதிகள் நடமாட்டம்?
புத்துார் நகரில், பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலின் பேரில், சட்டம் - ஒழுங்கு மற்றும் அதிரடிப்படை போலீசார், வீடு, வீடாகச் சென்று சோதனை நடத்தினர்.ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்திலுள்ள, புத்துார் நகரில், 50க்கும் மேற்பட்ட பீடி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், ஆறு ஆண்டுகளுக்கு முன், கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய, இரண்டு பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தனர். அதிரடிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு, அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
தற்போது, தமிழகம் மற்றும் ஆந்திரா எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக, உளவுத்துறையினர் எச்சரித்திருந்தனர்.இதையடுத்து, நேற்று காலை, புத்துாரில், சட்டம் - ஒழுங்கு மற்றும் ஆதிரடிப்படை போலீசார், வீடு, வீடாக சென்று பயங்கரவாதிகள் பதுக்கியுள்ளார்களா எனவும், அங்கு வசிக்கும் மக்களிடம், அவர்களது ஆதார் கார்டு காண்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
Source: Dinamalar