அத்திவரதர் பெருவிழாவின் 34-ஆவது நாளான சனிக்கிழமை அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற ஜரிகையுடன் பச்சை நிறப் பட்டாடையில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அத்திவரதர் பெருவிழாவின் 34-ஆவது நாளை முன்னிட்டு பெருமாள் 3-ஆவது நாளாக நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து ஆகஸ்ட் 17ம் தேதிவரை நின்ற கோலத்தில் காட்சியளிக்கவிருக்கிறார்.
அத்திவரதரை தரிசிக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு காத்திருக்கும் மக்களின் வசதிக்காக சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.
தரிசன முறைகள்
அத்திவரதரைக் காண பொது தரிசன வழியில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்கிறார்கள்.
அதில்லாமல், முதியவர்கள், கர்ப்பிணிகள், கைக் குழந்தையோடு வருவோர், மாற்றுத் திறனாளிகளுக்கு என தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நடக்க முடியாத முதியவர்களுக்கு என சக்கர நாற்காலிகள் அதிக அளவில் வழங்கப்படுகிறது.
மூன்றாவதாக, காலையில் ரூ.500 செலுத்தி சகஸ்ரநாம அர்ச்சனை தரிசனமும், மாலையில் ரூ.300 செலுத்தி சிறப்பு தரிசனமும் செய்யலாம். இதற்கு ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். தினமும் காலை 10 மணிக்கும், 11 மணிக்கும் இதற்கான முன்பதிவுகள் தொடங்குகின்றன. இப்படியும் முன்பதிவு செய்து சிறப்பு தரிசன வரிசையில் சென்று சுவாமியை தரிசிக்கலாம். இந்த தரிசன முறைகளுக்கும் சில மணி நேரங்கள் ஆகின்றன.
செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்
உங்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் நிச்சயம் உங்களிடம் இருக்க வேண்டும். கோயிலில் அன்னதானம் அளிக்கப்பட்டாலும், வரிசையில் காத்திருக்கும் போது தொய்வடையாமல் இருக்க நிச்சயம் உங்களிடம் உணவு அல்லது பிஸ்கட், பழம் போன்றவை இருப்பது அவசியம். அதே சமயம், ஒரு போதும் பட்டினியாகவோ, விரதம் இருந்தோ அத்திவரதரைக் காண வரிசையில் காத்திருக்கக் கூடவேக் கூடாது.
குடிநீர்.. இது எல்லோருக்குமே தெரியும்.
ஒவ்வொருவரும் வரிசையில் காத்திருக்கும் முன் நம் கையில் ஒரு லிட்டர் குடிநீர் நிச்சயம் இருக்க வேண்டும். வரிசையில் ஆங்காங்கே காவல்துறையினரும் குடிநீரை வழங்குகிறார்கள். தேவைப்பட்டால் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.
பேருந்தில் செல்வோர், கோயிலுக்குச் செல்லும் முன்பே, பேருந்தின் அருகிலேயே எங்கேனும் ஓரிடத்தில் காலணியை விட்டுச் செல்வது அவசியம். கோயில் அருகே காலணியை கழற்றிவிட்டால், மீண்டும் நீங்கள் வெறுங்காலுடன்தான் பேருந்து ஏற வேண்டியது இருக்கும்.
தளர்வான ஆடைகளை அணிந்திருப்பது அவசியம். கோயிலுக்குச் செல்கிறோமே, பட்டுடுடுத்தி அத்திவரதரை தரிசிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். உள்ளே லட்சக்கணக்கான மக்களுடன் வரிசையில் காத்திருக்கப் போகிறோம். எனவே தளர்வான பருத்தி ஆடைகளை அணியுங்கள்.
தெற்கு கோபுரம் வழியாகச் செல்லும் போது 22 கொண்டை ஊசி வளைவுகளைச் சந்திக்க நேரிடும். இந்த கொண்டை ஊசி வளைவுகளுக்கான வரிசை தொடங்கும் போது, முடியும் போது என கோயிலுக்குள் இரண்டு இடங்களில் மொபைல் டாய்லெட் எனப்படும் கழிவறைகள் உள்ளன. எனவே, அதை நிச்சயம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேவைப்படா விட்டாலும் கூட.
ஒரு வேளை அந்த வரிசையைத் தாண்டி கோயிலின் உள் கோபுரங்கள் வழியாக வரிசையைக் கடக்கும் போது உங்களுக்கு கழிவறை வசதி தேவைப்பட்டால் நிச்சயம் கிடைக்காது. எனவே அதுதான் கடைசி பிரேக்கிங் பாயிண்ட் என்பதை நினைவில் கொள்ளவும்.
அத்திவரதரை தரிசிக்கச் செல்லும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
கிழக்கு கோபுர நுழைவு வாயில் வழியாகவும், தெற்கு கோபுர வாயில் வழியாகவும் அனுமதிக்கப்படுகிறார்கள். தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் பக்தர்கள் மேற்கு கோபுர வாயில் வழியாக வெளியேற்றப்படுகிறார்கள்.
கிழக்கு கோபுர நுழைவு வாயில் என்பது பேருந்து நிலையங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு அருகில் இருப்பதால் எப்போதும் கிழக்கு கோபுர நுழைவு வாயிலில் கூட்டம் நிரம்பி வழியும்.
எனவே, தெற்கு கோபுர வாயில் வழியாக சுவாமியை தரிசிக்கச் செல்வது, அதிகப்படியான இடிபாடுகளில் சிக்குவதை விரும்பாதவர்களுக்கு உகந்ததாக இருக்கும்.
அதே சமயம், கிழக்கு கோபுர நுழைவு வாயிலின் வெளியில் இருக்கும் வரிசையில் இருக்கும் வசதிகளை விடவும், தெற்கு வாயிலில் இருக்கும் வரிசையில் மின் விசிறி வசதி, கழிப்பறை வசதிகள் சிறப்பாக இருக்கிறது.
அதிக சுமையைக் கொண்டு செல்வதைத் தவிருங்கள். ஏன் எனில் நீங்கள் கொண்டு செல்லும் சுமையை நீங்களே சுமந்துகொண்டுதான் செல்ல வேண்டும். எங்கும் வைக்க முடியாது. சிலர் கையில் இரண்டு பைகளோடு சுவாமி தரிசனம் செய்யும் போது, கையெடுத்துக் கும்பிட கூட முடியாமல் திணறுவதையும் பார்க்க முடிகிறது. அவ்வாறு இல்லாவிட்டால் முதுகில் மாட்டும் பைகளைப் பயன்படுத்தலாம்.
வரிசையில் நிற்கும் போதும் சரி, நடக்கும் போதும் சரி, உங்களுக்கு முன்னே செல்வோருக்கும் உங்களுக்கும் இடையே சற்று இடைவெளியை நீங்களே ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வரிசை நீண்ட நேரம் நிற்கும் போது உங்களுக்கான இடம் உங்களுக்குக் கிடைக்கும். பின்னால் இருப்பவர்கள் நெருக்கினாலும் இது உங்களுக்கு உதவும்.
ஒரு குழுவாகச் செல்லும் போது, எல்லாவற்றையும் உடன் வந்திருப்பவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்று நினைக்காமல், உங்களிடம் உங்களுடன் வந்தவர்களின் செல்போன் எண், எங்கு வாகனத்தில் ஏற வேண்டும் என அனைத்தையும் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். ஒன்றாகவே சென்று ஒன்றாகவே சுவாமி தரிசனம் செய்வது என்பது சற்று கடினமான விஷயம்தான்.
அடுத்து, சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வந்ததும், நீங்கள் நினைக்கும் திசையில் உங்களால் பயணிக்க முடியாது, அதுவும் காவல்துறையினரால் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது கோயில் வாயில்களை ஒட்டிய சாலைகளுக்கு அடுத்திருக்கும் சாலைகளில் மட்டுமே வெளியேற முடியும். அது கிட்டத்தட்ட 2 கி.மீ. அளவுக்கு தூரம் கொண்டது. எனவே அதை நடந்துதான் கடக்க வேண்டும். ஆட்டோ கிடைத்தால் அதிர்ஷ்டசாலிகள்தான்.
சொந்த வாகனத்தை கிடைக்கிறதே என்று எங்கேயாவது நிறுத்திவிட்டுச் செல்லாதீர்கள். வாகன நெரிசல் ஏற்பட்டு, திரும்பி வரும்போது உங்கள் வாகனத்தை எடுக்க முடியாத நிலை ஏற்படலாம்.
முதலும் கடைசியுமாக ஒரு விஷயம்.. நீங்கள் சொந்த அல்லது வாடகை வாகனங்களில் அத்திவரதரை தரிசிக்கச் சென்றிருந்தால், உங்கள் வாகனம் எங்கே நிற்கிறது, அதன் பதிவெண் என்ன, வாகன ஓட்டுநரின் செல்போன் எண் என அனைத்தையும் கேட்டறிந்து கொள்ளுங்கள்.
அது மட்டுமல்ல, வாகனத்தில் இறங்கிய பிறகு, அங்கிருந்து எத்தனை வலது, இடது பக்கங்களில் திரும்பி, எத்தனை சந்துகளைக் கடந்து வருகிறோம் என்பதையும் எண்ணி வைத்துக் கொள்ளுங்கள். திரும்பி வரும் போது அது மிகவும் முக்கியம்.
என்னடா இப்படியெல்லாம் டிப்ஸ் கொடுக்கிறார்களே என்று நினைக்க வேண்டாம். சுவாமி தரிசிக்கும் முன்பும், பின்பும், அந்த மனமகிழ்வோடு வீடு திரும்ப வேண்டும் என்றால், நிச்சயம் இதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால், இவையெல்லாம் தான் கவனத்தில் இருக்கும். அத்திவரதரை மறந்தேப் போவோம்.